விவசாயிகளிடமிருந்து நெல்லைக் கொள்வனவு செய்வதில் காணப்படும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கமத்தொழில் அமைச்சர் கௌரவ மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
நெல் கொள்வனவுக்கு சந்தைப்படுத்தல் சபைக்குப் போதியளவு பணம் ஒதுக்கப்படவில்லை. திறைசேரியிடமிருந்து கிடைத்த நிதியைக் கொண்டு ஓரளவுக்கு நெல் கொள்வனவை மேற்கொண்டுள்ளோம். இருந்தபோதும் எதிர்பார்த்த விலை கிடைக்காத காரணத்தினால் விவசாயிகள் நெல்லை விற்பனை செய்வதில் அக்கறை காண்பிக்கவில்லையென்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் அண்மையில் நடைபெற்ற கமத்தொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் நெல் கொள்வனவு குறித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த விடயங்களுக்குப் பதில் வழங்கும் வகையிலேயே அமைச்சர் கௌரவ அமரவீர இதனைத் தெரிவித்தார்.
நெல்லைக் கொள்வனவுக்காக விதிக்கப்பட்டுள்ள ஆகக் குறைந்த விலையில் நெல் கொள்வனவு செய்யப்பட்டாலும் அதனை விடக் குறைந்த விலையிலேயே அரிசியை விற்பனை செய்யும்நிலை நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு ஏற்படுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். இவ்வாறான பின்னணியில் நெல் கொள்வனவு தொடர்பில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி அவற்றைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
அதேநேரம், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட விவசாயிகள் முற்கூட்டியே விதைப்பினை ஆரம்பிப்பதால் உரங்களைக் கூடிய விலையில் பெற்றுக்கொள்ள வேண்டியிருப்பதாக அந்தப் பகுதிகளைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர். இதற்கமைய போகம் குறித்து தீர்மானிப்பதற்காக நடத்தப்படும் கூட்டத்தில் போகங்கள் ஆரம்பிக்கப்படும் காலத்தைப் பொதுவானதாகத் தீர்மானித்து அதனை அறிவிப்பது பற்றிக் கவனம் செலுத்தப்படும் என அமைச்சர் பதிலளித்தார்.
அத்துடன், முட்டை உற்பத்தி குறைந்தமையால் முட்டை விலை உயர்ந்ததாகவும், படிப்படியாக உற்பத்தி அதிகரித்து வருவதால் எதிர்காலத்தில் முட்டை விலையைக் குறைக்க முடியும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இக்கூட்டத்தில் அமைச்சர் (வைத்தியகலாநிதி) கௌரவ ரமேஷ் பத்திரண, இராஜாங்க அமைச்சர்களான கௌரவ டி.பி.ஹேரத், கௌரவ விஜித பேருகொட, கௌரவ மொஹான் பிரியதர்ஷன. சில்வா, கௌரவ கே.காதர் மஸ்தான், பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ ஏ.எச்.எம்.பௌசி, கௌரவ சந்திம வீரக்கொடி, கௌரவ ஏ.எல்.எம். அதா உல்லா, கௌரவ பிரியங்கர ஜயரத்ன, கௌரவ எஸ்.சிறிதரன், கௌரவ சாரள்ஸ் நிர்மலநாதன், கௌரவ சாணக்கியன் இராசமாணிக்கம், கௌரவ உபுல் மகேந்திர ராஜபக்ஷ, கௌரவ குணதிலக ராஜபக்ஷ, கௌரவ வருண லியனகே, கௌரவ கிங் நெல்சன், கௌரவ கலையரசன், கௌரவ ஜகத்குமார சுமித்திராரச்சி, கௌரவ குலசிங்கம் திலீபன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.