Doctor Vikatan: வேலைசெய்தாலோ, வயதானாலோ கைரேகை அழிந்துபோகுமா?

Doctor Vikatan: ஆதார் கார்டு மற்றும் வங்கி போன்ற இடங்களில் ரேகை வைக்கும் தேவை இன்று இருக்கிறது. அதுபோன்ற தருணங்களில் என் தோழியின் விரல் ரேகையைப் பதிவு செய்வதில் மிகவும் சிரமமாக உள்ளதாகச் சொல்கிறாள். தொடர்ந்து கைகளைப் பயன்படுத்தி வேலை செய்வதாலோ, வயோதிகத்தாலோ ரேகைகள் தேய்ந்துவிட வாய்ப்பு உண்டா?

– Meenakshi Mohan, விகடன் இணையத்திலிருந்து

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மற்றும் தடுப்பு மருத்துவ நிபுணர் சுபாஷினி வெங்கடேஷ்

பொது மற்றும் தடுப்பு மருத்துவ நிபுணர் சுபாஷினி வெங்கடேஷ்

ரேகைகள் குறித்துப் படிப்பதை ‘டக்டைலோகிராபி’ ( Dactylography) என்று சொல்வோம். அடையாளம் காண்பதற்கு கைரேகைகளைப் பயன்படுத்தலாம் என்பதை முதலில் கண்டறிந்து சொன்னவர் வில்லியம் ஹெர்ஷெல். ஒவ்வொருவரின் கைரேகையும் தனித்துவமானது மற்றும் நிரந்தரமானது என்பதையும் அவர்தான் கண்டறிந்தார்.

குழந்தை, தாயின் வயிற்றில் இருக்கும்போதே அதற்கு கைரேகை உருவாகிவிடும். இரட்டைக் குழந்தைகளாக இருந்தாலும் இரண்டு குழந்தைகளுக்கும் கைரேகை வேறு வேறாக இருக்கும். கைரேகை என்பது எப்படித் தனித்துவமான அடையாளமாகக் கருதப்படுகிறது என்பதையும் அதைவைத்து குற்றங்களைக் கண்டுபிடிப்பதையும் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

இன்று பல இடங்களிலும் பல சேவைகளைப் பெற கைரேகை வைக்க வேண்டியிருக்கிறது. அப்படி வைக்கும்போது அந்த மெஷினில் பிரச்னை இருந்தால் ரேகை சரியாகப் பதிவாகாது. கைவிரலில் ஈரமோ, அழுக்கோ இருந்தால்கூட அந்த ரேகையை மெஷின் ஏற்றுக்கொள்ளாது.

கைரேகை பகுப்பாய்வு

தொழுநோய் பாதித்தவர்களுக்கு அந்த நோயின் தீவிரம் காரணமாக ரேகை மறைய வாய்ப்புள்ளது. மின்விபத்து அல்லது ரேடியேஷனால் ஏற்பட்ட பாதிப்பு போன்றவற்றாலும் கைரேகைகள் அழிந்துபோகக்கூடும். மற்றபடி வயோதிகம் காரணமாகவோ, அதிக வேலை செய்வதாலோ ரேகை அழிந்துபோக வாய்ப்புகள் இல்லை. வயோதிகத்தால் ரேகை அழியும் என்ற நிலை இருந்தால் அதை முக்கிய அடையாளமாக எடுத்துக்கொள்ளும் வழக்கமே இருந்திருக்காது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.