நல்வரவு நண்பா| Welcome Friend | Dinamalar

நிலவின் தென் துருவப்பகுதியை ஆய்வு செய்வதற்காக ‘சந்திரயான்- 3’ விண்கலம் ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி தளத்தில் இருந்து கடந்த மாதம் 14ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதன் செயல்பாடுகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

சந்திரயான் – 3 விண்கலத்தில் உள்ள ‘புரபல்ஷன் மாட்யூல்’ எனப்படும் உந்து கலத்தில் இருந்து நிலவில் தரையிறங்க உள்ள ‘லேண்டர்’ சாதனம் ஆக. 17ம் தேதி பிரிந்தது.

இது நிலவில் நாளை மாலை 6:04 மணிக்கு தரை இறங்க உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதன் நேரலை ஒளிபரப்பு நாளை மாலை 5:20 மணி முதல் துவங்குகிறது.

லேண்டர் தரை இறங்கியவுடன் அதன் உள்ளே இருந்து ‘ரோவர்’ வாகனம் வெளியே வந்து நிலவின் மேற்பரப்பில் சுற்றி வந்து ஆய்வு மேற்கொள்ளும். இந்நிலையில் 2019ல் ஏவப்பட்ட சந்திரயான் – 2 ஆர்பிட்டர் இப்போதும் நிலவின் சுற்றுவட்ட பாதையில் சுற்றி வந்து கொண்டிருக்கிறது. இது ஏழு ஆண்டுகள் செயல்படும் திறன் உடையது.

இந்த சந்திரயான் – 2 ஆர்பிட்டர் மற்றும் சந்திரயான் – 3 லேண்டர் சாதனம் இடையே இருவழி தகவல் தொடர்பு நேற்று வெற்றிகரமாக நிறுவப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்தது. ‘நல்வரவு நண்பா’ என்ற வரவேற்பு வாசகத்துடன் சந்திரயான் – 2 ஆர்பிட்டர், சந்திரயான் – 3 லேண்டர் சாதனத்தை வரவேற்றதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

இதன் வாயிலாக பெங்களூரு இஸ்ரோ அலுவலகத்தில் உள்ள ‘மாக்ஸ்’ எனப்படும் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு அறையில் இருந்து லேண்டர் சாதனத்துடனான இருவழி தகவல் தொடர்பை நிறுவ, அதிகப்படியான வழிகள் உருவாக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்தது.

நிலவின் தென்துருவத்தை இதுவரை எந்த நாடும் ஆய்வு செய்ததில்லை. காரணம் அங்கு சூரிய வெளிச்சம் மிகவும் குறைவான நேரமே இருக்கும். அந்த நேரத்தை கணக்கிட்டு விண்கலத்தை தரையிறக்க வேண்டும். இதே பகுதியில் ஆய்வு செய்ய ரஷ்யா அனுப்பிய விண்கலம் நேற்று முன்தினம் தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

விண்வெளியில் நாளை இந்தியா புதிய சாதனை படைக்க காத்திருக்கிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.