புதுடில்லி,’தமிழகத்தின் துாத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க வேண்டும் என்ற வேதாந்தா நிறுவனத்தின் மனுவை, அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்’ என உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மனுத் தாக்கல் செய்துள்ளது.
தமிழகத்தின் துாத்துக்குடியில் வேதாந்தா நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலை செயல்பட்டு வந்தது. கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாக தொடர்ந்து புகார் எழுந்ததை அடுத்து, கடந்த 2018ல் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
இந்த வழக்கு தொடர்பான அனைத்து மனுக்கள் மீதான விசாரணையை, இன்றும், நாளையும் நடத்த உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
இதற்கிடையே, பராமரிப்பு பணிகளுக்காக ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிட வேண்டும் என வேதாந்தா நிறுவனம் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கான விபரங்களை அந்த நிறுவனம் பிராமணப் பத்திரம் வாயிலாக தாக்கல் செய்திருந்தது.
இந்நிலையில், ஆலையை மீண்டும் திறப்பது தொடர்பான வேதாந்தா நிறுவனத்தின் மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த 22 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்தியுள்ளது. அடிப்படை விதிகளை பின்பற்றாததால், ஆலையைச் சுற்றியுள்ள பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி அளிப்பது என்பது சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான விஷயம் என்பதால் அனுமதி வழங்க முடியாது.
மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பலமுறை சோதித்த பிறகே, இது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனவே வேதாந்த நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement