நிலவு பயணம் சக்சஸ்… சூரியனுக்கு குறிவைக்கும் இஸ்ரோ… வாழ்த்து சொன்ன மோடி

சந்திராயான் 3 லேண்டரை நிலவில் இறக்கும் பணிகள் சரியாக இன்று மாலை 5.44 மணிக்கு தொடங்கின. முதற்கட்டமாக லேண்டரின் வேகத்தை குறைக்கும் செயல்முறையை வெற்றிகரமாக முடித்தது. நிலவின் மேற்பரப்பில் இருந்து லேண்டரின் உயரம் படிப்படியாக குறைக்கப்பட்டது. அதன்பிறகு செங்குத்தான நிலைக்கு லேண்டர் நிறுத்தப்பட்டது. அதன்பிறகு தரையிறங்கும் இடத்தை நோக்கி தேர்வு செய்தது. பிறகு வினாடிக்கு 2 மீட்டர் என்ற வேகத்தில் குறைக்கப்பட்டு, நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது இஸ்ரோ.

ஒவ்வொரு கட்ட வெற்றியின்போது இஸ்ரோ விஞ்ஞானிகள் கரவோலி எழுப்பி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இறுதியாக லேண்டர் நிலவில் தரையிறங்கிய நிலையில், விஞ்ஞானிகள் அனைவரும் எழுந்து நின்று உற்சாகமாக கைகளை தட்டியும், ஒலி எழுப்பியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

சந்திரயான் 3 லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கப்பட்ட நிலையில், இஸ்ரோ தலைவர் சோம்நாத், “இந்தியா நிலவில் உள்ளது” என்று மகிழ்ச்சியோடு கூறினார்.

காணொலி வழியாக நிகழ்வை பார்த்துக்கொண்டிருந்த பிரதமர், லேண்டர் தரையிறங்கியதும் இந்திய தேசிய கொடியை கைகளில் ஏந்தி ஆட்டினார். பின்னர் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “இந்தியாவின் விண்வெளித் துறைக்கு வரலாற்று சிறப்பு மிகுந்த நாள் இன்று. நிலவை நோக்கிய சந்திரயான் -3 பயணத்தின் குறிப்பிடத்தக்க வெற்றிக்காக வாழ்த்துகள்.

இந்த தருணம் புதிய இந்தியாவின் விடியல். நம் கண் முன்னே புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது. புதிய ஆற்றலும் புதிய நம்பிக்கையும் பிறந்துள்ளது. ஓய்வின்றி விஞ்ஞானிகள் உழைத்தது தற்போது பலன் அளித்துள்ளது. இந்த வெற்றி மனித குலம் முழுமைக்கும் உரியது. இந்தியாவால் எதையும் சாதிக்க முடியும் என்பது நிரூபணமாகியுள்ளது. இந்திய குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் எனது வாழ்த்துகள். அடுத்து சூரியனுக்கான பயணத்தை தொடங்குவோம்” என்று பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.