சென்னை: உயர் நீதிமன்றம் எழுப்பும் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை செயலாளர்கள், தலைவர்கள் தான் பதிலளிக்க வேண்டும் என அனைத்து துறைக்கும் சுற்றறிக்கை பிறப்பிக்க, தமிழக தலைமைச் செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக வருவாய் துறையில் துணை ஆட்சியராக பணியாற்றிய ஜெயராம் என்பவர், மாவட்ட வருவாய் அதிகாரி பதவி உயர்வுக்கான பட்டியலில் இடம்பெற்ற போதும், அரசின் காலதாமதத்தால் பணி ஓய்வுக்கு முன் தனக்கு பதவி உயர்வு கிடைக்கவில்லை எனக்கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கை தள்ளுபடி செய்த தனி நீதிபதி, பட்டியலில் பெயர் இடம்பெற்றிருந்ததால் பதவி உயர்வு வழங்கும்படி உரிமை கோர முடியாது என உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து ஜெயராமன் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் குமரேஷ் பாபு ஆகியோர் அமர்வு, 41 துணை ஆட்சியர்களின் பெயர்கள் மாவட்ட வருவாய் அதிகாரி பதவி உயர்வு பட்டியலில் இருந்த நிலையில் 10 பேருக்கு மட்டும் பதவி உயர்வு வழங்கப்பட்டது குறித்து விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு மீண்டும் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில், தமிழக பொதுத்துறை பிரிவு அதிகாரி அளித்த விளக்கம் அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டது. அறிக்கையைப் படித்துப் பார்த்த நீதிபதிகள், கடும் அதிருப்தி தெரிவித்தனர். பொதுத்துறை பிரிவு அதிகாரி அளித்த விளக்கத்தில் நீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கவில்லை. துறையின் செயலாளர் விளக்கம் அளித்திருந்தால் நீதிமன்ற கேள்விக்கு பதிலளித்திருப்பார்.
உயர் நீதிமன்றம் எழுப்பும் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை செயலாளர்கள், துறை தலைவர்கள் மட்டுமே பதிலளிக்க வேண்டும் என அனைத்து துறை செயலாளர்களுக்கும் சுற்றறிக்கை பிறப்பிக்க தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஆகஸ்ட் 30ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
மேலும், அன்றைய தினம் இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு விளக்கமாக பதிலளிக்க வேண்டும் என பொதுத்துறை செயலாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.