கனவு 113 | மரவள்ளிக் கிழங்கு: அலங்காரப் பொருள்கள் டு பெயின்ட் | திருச்சி – வளமும் வாய்ப்பும்

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள்
(MSME – Micro, Small and Medium Enterprises):

திருச்சி மாவட்டத்தின் வளங்களில் ஒன்றான மரவள்ளிக்கிழங்கைப் பயன்படுத்தி குழந்தைகள், மாணவர்கள் பயன்படுத்தும் வகையிலான அலங்காரப் பொருள்களை (Blank Decoration) உருவாக்கலாம். உதாரணமாக, பூசணி, வாழை, ஆப்பிள், அன்னாசி போன்ற பழங்கள், காய்களின் வடிவங்களை உருவாக்கலாம். இவை முதலில் வெள்ளை நிறத்தில் வெறுமையாக இருக்கும். இவற்றின்மீது வண்ணங்களைத் தீட்டி, கிறிஸ்துமஸ், தீபாவளி உள்ளிட்ட பண்டிகைளின்போது வீட்டை அலங்கரிக்கவும், குழந்தைகளின் விளையாட்டு அலங்காரப் பொருள்களாகவும் பயன்படுத்தலாம். உதாரணமாக, நவராத்திரி கொலுபொம்மைகள் போன்றவற்றையும் இதன் மூலமாக உருவாக்கலாம்.

பொதுவாகக் குழந்தைகள் விரும்பி விளையாடும், விளையாட்டுப் பொருள்கள் பிளாஸ்டிக்கால் ஆனவை. இந்த வகை பொருள்கள் நச்சு மற்றும் அமிலத்தன்மை கொண்டவை என்பதோடு சுற்றுச்சூழலுக்கும் கேடு விளைவிப்பவை. ஆனால், மரவள்ளிக்கிழங்கிலிருந்து உருவாக்கப்படும் அலங்காரப் பொருள்களானது எளிதில் மக்கும் தன்மை கொண்டவை. சுற்றுச்சூழலையும் பாதுகாக்க உதவும். பிளாஸ்டிக் குப்பைகளைப்போல மண்ணை மலடாக்காமல், இவை மண்ணுக்குக் கூடுதல் வளத்தைத் தருகின்றன. ஒருமுறை பயன்படுத்திவிட்டுத் தூக்கி எறியும் வகையில் இல்லை என்பதால், மீண்டும் அவற்றை மறுஉருவாக்கம் செய்யலாம். மேலும், மரம் மற்றும் பீங்கான் போன்ற பொருள்களைக் காட்டிலும் எடை குறைவானது. தேவையெனில் உரமாகவும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

மேலைநாடுகளில் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளில் இந்த வகை அலங்காரப் பொருள்களை அவர்களின் கற்றல் திறன் மேம்பட உதவுவதற்காகப் பயன்படுத்துகின்றனர். ஹலோவீன் (Halloween) பண்டிகையின்போதும் இதை உபயோகப்படுத்துகின்றனர். ஹாலோவீன் என்பது மாறுபட்ட வேடங்கள் அணிந்து கொண்டாடும் பண்டிகை. வேடமிடும்போது வெற்று அலங்காரப் (Blank Decoration) பொருளைப் பயன்படுத்துகிறார்கள். வெளிநாடுகளில் இதற்கான சந்தை வாய்ப்பு சிறப்பாக உள்ளது. இதைப் பயன்படுத்திக்கொண்டு, ஏற்றுமதி செய்யலாம். வெளி மாநிலங்கள் மற்றும் உள்ளுரிலும் உள்ள மழலையர் பள்ளிகளிலும் அதிகளவில் கொள்முதல் செய்ய வாய்ப்புள்ளதால் இதற்கான தொழிற்சாலையை திருச்சி மாவட்டத்தில் நிறுவலாம்.

மரவள்ளிக்கிழங்கைக் கொண்டு கார்பன் இங்க் (Carbon Ink) தயாரிப்பது குறித்து கனவு 109-வது அத்தியாயத்தில் சிபாரிசு செய்திருந்தோம். அந்த வரிசையில் மரவள்ளிக் கிழங்கு மாவைப் பயன்படுத்தி பெயின்ட் தயாரிப்பது குறித்து இங்கே காணலாம்.

பெயின்ட் தயாரிக்க நிறமிகள் (Colourants), கரைப்பான் (Solvent), பைண்டர்கள் (Binders) உள்ளிட்ட மூன்றும் மிக முக்கியம். சந்தையில் விற்கப்படும் சிந்தடிக் பெயின்ட்களில் (Synthetic Paint) நிறமிகளுக்காக தாதுக்களையும், கரைப்பானுக்காக பெட்ரோலியம் சார்ந்த எண்ணெய்களையும், பைண்டர்களுக்காக பாலிமர்களையும் பயன்படுத்துகிறார்கள். இப்படி உருவாக்கப்படும் பெயிண்ட்டுகளில் புதைபடிவ எரிபொருளான பெட்ரோலியம் கலந்திருப்பதால், அவை சுற்றுச்சூழலுக்குக் கேடுகளையே உருவாக்குகின்றன. இவற்றுக்குத் தீர்வாகவும் மாற்றாகவும் மரவள்ளிக் கிழங்கு மாவைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் பெயின்ட்டை சிபாரிசு செய்யலாம்.

பொதுவாக, கிழங்கு வகைகளிலிருந்து அதிகளவில் ஸ்டார்ச் காணப்படும் என்பதால், அந்த ஸ்டார்ச்சைப் பயன்படுத்தி பெயின்ட் உருவாக்கலாம். இவற்றை பிளான்ட் பேஸ்டு பெயின்ட் (Plant Based Paint) என்று வகைப்படுத்துகிறார்கள். கிழங்கில் உள்ள ஸ்டார்ச்சை, கரைப்பானாக மாற்றிப் பயன்படுத்தலாம். மரவள்ளிக்கிழங்கில் உள்ள ஸ்டார்ச் (அதாவது கரைப்பான்) உடன் தண்ணீரைச் சேர்க்க வேண்டும். இங்கே தண்ணீர் பைண்டராகப் பயன்படுத்தப்படுகிறது. இதுவே பெயிண்ட்டுக்கான அடிப்படைக் கலவை. இவற்றுடன் தேவையான நிறமிகளைச் சேர்த்து கலக்கினால், அதற்கேற்றவாறான வண்ண பெயிண்டுகளை உருவாக்கலாம்.

கட்டுமானங்களில் வெளிப்புறச் சுவர்களில் அதிக அடர்த்தியும், உட்புறச் சுவர்களில் குறைந்த அடர்த்தியிலான பெயிண்டுகளே பூசப்படும். இதற்கு ஏற்றவாறு, அதிக அடர்த்திக்கு அதிக ஸ்டார்ச்சும், குறைவான அடர்த்திக்கு குறைந்த அளவிலான ஸ்டார்ச்சும் பயன்படுத்த வேண்டும். இவற்றின் தயாரிப்புச் செலவு குறைவு மற்றும் இயற்கைக்கு ஆதரவான ஒன்று என்பதால் சிந்தடிக் பெயின்டுகளைக் காட்டிலும், பிளான்ட் பேஸ்டு பெயிண்ட்டைப் பயன்படுத்த மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

திரைப்படங்களுக்கான பிரமாண்ட செட்டுகளை அமைத்து, படம் பிடித்த பின்னர் அத்தகைய செட்டுகள் பிரிக்கப்பட்டு, பெரும்பாலானவை குப்பையிலேயே வீசப்படுகின்றன. இவற்றில் பயன்படுத்தப்படும் பெயிண்டுகள் சிந்தடிக் வகை பெயிண்ட்களே. அதற்கு மாற்றாக, பிளான்ட் பேஸ்டு பெயிண்டுகளைத் திரைப்படத்துறையில் கலை இயக்கம் பிரிவில் உள்ளோர் அதிகமாகப் பயன்படுத்த சிபாரிசு செய்யலாம். இதன் வழியே அதன் விற்பனையும் அதிகரிக்கும் என்பதால், திருச்சி மாவட்டத்தில் மரவள்ளிக்கிழங்கைப் பயன்படுத்தி பெயிண்ட் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைக்கலாம்.

திருச்சி மாவட்டத்தில் சுமார் 13,000 ஏக்கர் பரப்பளவில் மரவள்ளிக் கிழங்கு பயிரிடப்பட்டு, ஏக்கர் ஒன்றுக்குச் சுமார் 15 டன் வீதம் ஆண்டொன்றுக்குத் தோராயமாக 2,00,000 டன் அளவுக்கு விளைச்சல் கிடைக்கிறது. இவற்றிலிருந்து குறிப்பிட்ட சதவிகிதத்தை எடுத்துக்கொண்டு பெயிண்ட் தயாரிக்கலாம்.

ஆஸ்திரேலியாவில் உள்ள பயோ புராடக்ட்ஸ் (Bio products Pt Ltd) எனும் நிறுவனம் பிளான்ட் பேஸ்டு பெயின்ட்டுகளைத் தயாரித்து, விற்பனை செய்துவருகிறது. ஒரு லிட்டர் பெயின்ட்டைத் தோராயமாக 3,000 ரூபாய் என விலை நிர்ணயம் செய்து, விற்பனை செய்துவருகிறது. இந்தியச் சந்தை மதிப்பில் நாம் விலை நிர்ணயம் செய்து, மார்க்கெட்டில் விற்பனை செய்தால் ஆண்டொன்றுக்குப் பல கோடி ரூபாய்க்கு வருமானம் ஈட்டி, திருச்சி மாவட்டத்தின் பொருளாதாரத்தை உயர்த்தலாம்.

நம் அடுத்தக் `கனவு’ கோயம்புத்தூர்..

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.