வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: நிலவில் ஆய்வு செய்ய இந்தியா அனுப்பிய சந்திரயான்-3 திட்டத்தின்கீழ் விக்ரம் லேண்டர் நேற்று (ஆக.,23) வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது. இந்த நிகழ்வு இஸ்ரோ சார்பில் யூடியூப் தளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனை ஒரே நேரத்தில் 80 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். யூடியூப் வரலாற்றில் நேரடி ஒளிபரப்பை அதிகம் பேர் பார்த்த வீடியோவாக இது சாதனை புரிந்துள்ளது.
‘இஸ்ரோ’ எனும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் சார்பில் நிலவை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நேற்று மாலை 6:04 மணிக்கு தரையிறங்கியது. நிலவின் தென் துருவத்தில் கால்பதித்த முதல் நாடு என்ற சிறப்பை இந்தியா பெற்றது. இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை இஸ்ரோவின் யூடியூப் பக்கத்தில் மாலை 5:20 மணி முதல் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
அதோடு இந்தியா உட்பட உலக நாடுகளின் செய்தி நிறுவனங்களும் இதை நேரலையில் ஒளிபரப்பின. இதில் யூடியூப் தளத்தில் மட்டும் நேரலை நிகழ்வை சுமார் 80 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையை நிகழ் நேரத்தில் பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. இது உலக அளவில் யூடியூப் தளத்தில் அதிகம் பார்க்கப்பட்ட நேரலை வீடியோவாக அமைந்துள்ளது.

இதற்கு முன்னர் யூடியூப் தளத்தில் நேரலையில் ஒளிபரப்பான வீடியோக்களில் ‘கால்பந்து உலகக் கோப்பை 2022’ தொடரின் பிரேசில் மற்றும் குரோஷியா அணிகளுக்கு இடையிலான போட்டி சுமார் 61 லட்சம் பார்வையை அதிகபட்சமாக பெற்றிருந்தது. அதே தொடரில் பிரேசில் மற்றும் தென் கொரியா அணிகளுக்கு இடையிலான போட்டி சுமார் 52 லட்சம் பார்வையை பெற்று 2வது இடத்தில் இருந்தது. இந்த சாதனைகளை இஸ்ரோவின் விக்ரம் லேண்டர் தரையிறங்கும் நிகழ்வு முறியடித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement