இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மறைவுக்குப் பிறகு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்றபோது நாட்டின் ஒன்பதாவது பிரதமராகவும், தென்னிந்தியாவிலிருந்து முதல் பிரதமராகவும் நரசிம்ம ராவ் பதவியேற்றார். சுதந்திரப் போராட்ட வீரரான இவர், ஆந்திர முதல்வராகவும் பணியாற்றியிருக்கிறார்.

இந்தியாவின் பொருளாதார சீர்திருத்தவாதிகளில் முக்கியமான பிரதமராகக் கருதப்படும் இவரின் ஆட்சியில் தான், தனியார் தொழில் தடை நீக்கம், தனியார் முதலீடு ஊக்குவிப்பு எனப் புதிய பொருளாதாரக் கதவுகள் திறக்கப்பட்டன. 1991 முதல் 1996 வரை நடைபெற்ற இவரின் ஆட்சியில் தான் பாபர் மசூதி இடிப்பு எனும் வரலாற்றுச் சம்பவமும் அரங்கேறியது. இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மணிசங்கர் அய்யர், பா.ஜ.க-வின் முதல் பிரதமர் வாஜ்பாய் அல்ல, நரசிம்ம ராவ் என்று கூறியிருக்கிறார்.
மணிசங்கர் அய்யர் எழுதிய `மெமோயர்ஸ் ஆஃப் எ மேவரிக் – தி ஃபர்ஸ்ட் ஃபிப்டி இயர்ஸ் 1941-1991 (Memoirs of a Maverick – The First Fifty Years 1941-1991)’ எனும் சுயசரிதை புத்தக வெளியீட்டு விழா நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் சோனியா காந்தி உட்பட பல காங்கிரஸாரும் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கேள்வி பதில் அமர்வில், ‘ராம்-ரஹீம்’ யாத்திரையை சமயத்தில் நரசிம்ம ராவுடனான ஓர் உரையாடலை மணிசங்கர் அய்யர் பகிர்ந்துகொண்டார்.

அப்போது, “உங்களுடைய யாத்திரையில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால், மதசார்பின்மை பற்றிய உங்களின் வரையறையை நான் ஏற்கவில்லை நரசிம்ம ராவ் என்னிடம் கூறினார். பின்னர், மதசார்பின்மை பற்றிய என்னுடைய கருத்தில் என்ன தவறு இருக்கிறது என்று நான் கேட்டேன். அதற்கு, `மணி, இது இந்து நாடு என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவில்லை போல’ என்று அவர் கூறினார். உடனே, இதைத்தான் பா.ஜ.க-வும் கூறுகிறது என்று அவரிடம் கூறினேன். அதனால் தான், பா.ஜ.க-வின் முதல் பிரதமர் வாஜ்பாய் அல்ல, நரசிம்ம ராவ்” என்று மணிசங்கர் அய்யர் கூறினார்.
Junior vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs