சந்திரயான் 3, லேண்டர் நிலவின் தென் பகுதியில் வெற்றிகரமாக தனது தடத்தைப் பதித்து இந்தியா வரலாற்று சாதனையைப் படைத்திருக்கிறது. இந்திய மக்கள் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது இந்தச் செய்தி.
இதற்கு பிரதமர், முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் மட்டுமின்றி மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்களும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து சந்திரயான் 3-ன் திட்ட இயக்குநரான வீர முத்துவேல், இஸ்ரோ தலைவர் சோம்நாத், விஞ்ஞானிகள் தாமோதரன், கார்த்திகேயன் என்று இஸ்ரோவில் பணியாற்றிய ஒவ்வொருவரையும் பாராட்டி வருகின்றனர். அந்தவகையில் சந்திரயான் 3 திட்டக்குழுவில் இடம்பெற்று பணியாற்றிய சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞரையும் பாராட்டி வருகின்றனர். ஏழ்மையான குடும்ப பின்புலத்தில் இருந்து வந்த இளைஞநரின் இந்த வெற்றிக்கானப் போராட்டம் பலரையும் ஈர்த்திருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டத்தில் உள்ள சாரௌடா என்ற பகுதியைச் சேர்ந்தவர் பரத் குமார். சாதாரணக் குடும்பத்தை சேர்ந்த இவரது தந்தை வங்கி காவலாளியாகப் பணிபுரிந்திருக்கிறார். அவரின் அம்மா டீக்கடை நடத்தி வந்திருக்கிறார். பல நேரங்களில் பரத் குமாரும் தனது அம்மாவிற்கு உதவியாக டீக்கடையில் வேலை பார்த்திருக்கிறார். ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது அவரால் கல்விக் கட்டணம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால் பள்ளி படிப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்திருக்கிறார்.
அப்போது அவரின் திறமையையும், குடும்ப சூழ்நிலைகளையும் புரிந்துகொண்ட பள்ளி நிர்வாகம் அவரின் கல்வி செலவுகளை ஏற்றுக்கொண்டிருக்கிறது. பின்பு நன்கு படித்த பரத்குமார் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வில் நல்ல மதிப்பெண்களை எடுத்திருக்கிறார். இதனால் அவருக்கு தன்பாத் ஐ.ஐ.டியில் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிக்க இடம் கிடைத்திருக்கிறது. கல்லூரி படிப்பைத் தொடர்ந்த அவரை மீண்டும் வறுமை வாட்டியிருக்கிறது. இருப்பினும் பலரின் உதவியோடு படித்து அனைத்து செமஸ்ட்டர் தேர்வுகளிலும் நல்ல மதிப்பெண்களைப் பெற்றிருக்கிறார்.

பின்பு கல்லூரி நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்ற பரத் குமாருக்கு விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் பணிபுரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதனையடுத்து தனது 23 வயதில் உலக நாடுகளே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த சந்திராயன் 3 திட்டக் குழுவில் இடம் பெற்று கடுமையாக உழைத்திருக்கிறார் பரத் குமார். சந்திரயான் 3-ன் வெற்றி இவரது பெயரையும் வரலாற்றில் பதித்து இருக்கிறது. வறுமை வாட்டியப் போதும் தடைகளைத் தகர்த்தி வெற்றிக்கண்ட பரத் குமார் இன்று பலருக்கும் நம்பிக்கை நட்சத்திரமாய் திகழ்கிறார். வாழ்த்துகள் பரத் குமார்!