வாஷிங்டன், அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசு கட்சி வேட்பாளருக்கான போட்டியில் உள்ள, இந்திய வம்சாவளியான விவேக் ராமசாமியின் தேர்தல் பிரசாரத்துக்கு, ஒரு மணி நேரத்தில் 4 கோடி ரூபாய் வசூலானது.
அமெரிக்காவில் அடுத்தாண்டு நடக்கவுள்ள அதிபர் தேர்தலுக்காக ஜனநாயக கட்சி சார்பில், தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும்போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
எதிர்க்கட்சியான குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் உட்பட பலரும் போட்டியிட முடிவு செய்துள்ளனர்.
அதேபோல், அக்கட்சி சார்பில் இந்திய வம்சாவளிகளான விவேக் ராமசாமி, 38, நிக்கி ஹாலே உள்ளிட்டோரும் போட்டியிடுவதற்காக, ஆதரவு திரட்டி வருகின்றனர்.
இந்நிலையில், குடியரசு கட்சி வேட்பாளருக்கான போட்டியில் உள்ளவர்களுக்கு இடையிலான விவாத நிகழ்ச்சி நேற்று நடந்தது.
விஸ்கான்சின் மாகாணத்தில் உள்ள மில்வாக்கி பகுதியில் நடந்த நிகழ்ச்சியில், முன்னாள் அதிபர் டிரம்ப் பங்கேற்காத நிலையில், எட்டு வேட்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இதில், இந்திய வம்சாவளியும், தமிழருமான விவேக் ராமசாமியின் சிந்தனைகளும், செயல்திட்டங்களும் பலரை கவர்ந்தன.
முதல் விவாதத்திலேயே, சிறப்பாக பேசப்பட்ட வேட்பாளர்களின் ஒருவராக அவர் பிரகாசித்துள்ளதாக கூறப்படுகிறது. விவாதத்துக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் அவருக்கு ஆதரவு அதிகரித்து உள்ளது.
சக போட்டியாளர்களின் கேள்விகளுக்கும், தாக்குதல்களுக்கும் சமயோசிதமாக பதிலளித்ததன் வாயிலாக, தன் திறமையை விவேக் நிரூபித்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்து உள்ளன.
பிரபல இணையதளபக்கமான கூகுள் தேடலில் அதிகம் தேடப்பட்ட நபராகவும் அவர் இருந்துள்ளார். விவாத நிகழ்ச்சி முடிந்த அடுத்த ஒரு மணி நேரத்தில் மட்டும் அவருக்கு ஆதரவாக 4 கோடி ரூபாய் நன்கொடையாக கிடைத்துள்ளது.
இளம் வயது கோடீஸ்வர தொழிலதிபரான விவேக் அமெரிக்காவில் பிறந்தவர் என்ற போதிலும், அவரது பெற்றோர் நம் நாட்டில் பிறந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்