எதிர்க்கும் செல்வப்பெருந்தகை; கடுப்பில் கே.எஸ்.அழகிரி தரப்பு – பரபரப்பு அடங்காத சத்தியமூர்த்தி பவன்

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.எஸ்.அழகிரி கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரியில் நியமனம் செய்யப்பட்டார். கட்சி விதிமுறைகளின் படி அவரின் பதவிக்காலம் கடந்த ஆண்டு பிப்ரவரியுடன் முடிந்துவிட்டது. இதையடுத்து, அந்தப் பதவியைப் பிடிக்க ஜோதிமணி, கார்த்தி சிதம்பரம், செல்லகுமார், ரூபி மனோகரன், செல்வப்பெருந்தகை ஆகியோரிடையே கடுமையான போட்டி நிலவிவருகிறது.

கார்த்தி சிதம்பரம்

ஆனால், அகில இந்திய தலைமை இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கிடையில் தமிழக தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடந்தது. அதில் பேசிய தமிழக தலைவர்கள், “தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரியை மாற்ற வேண்டும்” என பலரும் கோரிக்கை வைத்தனர். அதற்கு பதிலளித்த கார்கே, “மாற்றம் விரைவில் இருக்கும். சரியான நேரத்தில், சரியான நபரைத் தேர்வுசெய்வோம். நீங்கள் சென்று கட்சியை வளர்க்கும் வேலையை மட்டும் பாருங்கள்” என்றார்.

இதையடுத்து புதிய தலைவரை நியமிப்பதற்கான வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையில் செல்வப்பெருந்தகைக்கு அந்த பதவியை பெற்றுத்தர தி.மு.க தலைமை தீவிர முயற்சி மேற்கொண்டதாக தகவல்கள் பரபரத்தது. இதற்கு பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இந்த விவகாரம் குறித்து அழகிரியின் ஆதரவாளரும் தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி அணித் தலைவருமான ரஞ்சன்குமார் கடிதம் ஒன்றை கார்கேவுக்கு அனுப்பினார்.

மல்லிகார்ஜூன கார்கே.

அதில், “செல்வப்பெருந்தகை தற்போது வகித்துவரும் காங்கிரஸ் சட்டமன்றக்குழுத் தலைவர் மற்றும் பொது கணக்குக் குழு தலைவர் பதவி மூலம் இதுவரை தமிழக காங்கிரஸ் கட்சிக்கு எந்தவித நன்மையும் நடைபெறவில்லை. உதாரணமாக அவர் சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகிக்கும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு காங்கிரஸ் கட்சியின் சார்பில் அருள் என்பவர் போட்டியிட்டார்.

அவரை தி.மு.க-வினருடன் சேர்ந்து தோற்கடித்துவிட்டார். அது குறித்த செய்திகள் வெளியாகி முதல்வரின் பார்வைக்குச் சென்றது. அவர் மறு தேர்தல் நடத்தச் சொல்லியும் தற்போதுவரை செய்யவில்லை. 18 சட்டமன்ற உறுப்பினர்களையே ஒருங்கிணைத்து செய‌ல்பட முடியாமல் தடுமாறிக்கொண்டிருக்கும் நபரால் 300-க்கும் மேற்பட்ட மாநில நிர்வாகிகள் 78-க்கும் மேற்பட்ட மாவட்டத் தலைவர்களை ஒருங்கிணைத்து எப்படிச் செயல்பட முடியும்.

தி.மு.க தலைவர் ஸ்டாலின்

இதற்கு முன்பு தலித் தலைவர்களாக அடையாளம் காணப்பட்ட அய்யா இளையபெருமாள், மரகதம் சந்திரசேகர் போன்ற தலித் ஆளுமைகளை காங்கிரஸ் பேரியக்கத் தொண்டர்கள் ஏற்றுக்கொண்டனர். அதுபோல் இவரை நிச்சயம் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதற்கு இவருடைய கடந்தகால செயல்பாடுகளும், குற்றப் பின்னணியும் காரணம். கடந்த 12 வருடங்களுக்கு முன்புதான் காங்கிரஸில் இணைந்தார்.

எனவே இவரால் காங்கிரஸ் தொண்டர்களையோ, கொள்கைகளையோ ஏற்றுக்கொண்டு செயல்பட முடியாது. நாடாளுமன்றத் தேர்தல் வரவிருக்கும் சில மாதங்களில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை மாற்றம் என்பது நிச்சயம் தேர்தலில் பெரும் பாதிப்பையே ஏற்படுத்தும். அதுவும் செல்வப்பெருந்தகையை நியமித்தால் பிளவு ஏற்பட்டு நாடாளுமன்றத் தேர்தலில் கட்சிக்குப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தும்” என தெரிவித்திருந்தார்.

காங்கிரஸ் தலைவர்கள்

மேலும் அழகிரி தனது ஆதரவாளர்களை அழைத்துக்கொண்டு பெங்களூருவுக்கு சென்றார். அங்கு கார்கேவை சந்தித்தார். அப்போது அழகிரியின் ஆதரவாளர்கள், “தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக செல்வப்பெருந்தகையை நியமிக்கக் கூடாது. அவ்வாறு செய்தால் அது மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும். தலைவரே நாடாளுமன்ற தேர்தல் வரையில் இருக்கட்டும்” என தெரிவித்துவிட்டு வந்தனர்.

இதனால் செல்வப்பெருந்தகை தரப்பினர் அதிர்ச்சியை சந்தித்தனர். இதற்கிடையில் இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, “ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரஸ் காரிய கமிட்டியை தலைமை தான் அறிவிக்கும். இதற்காக காத்திருப்போம். கட்சி தலைமை என்ன முடிவெடுத்தாலும் அதற்கு கட்டுப்பட வேண்டும். தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.எஸ்.அழகிரி நீடிக்க வேண்டும் என்பது அவரது விருப்பமாக இருக்கலாம். ஆனால் அதை முடிவு செய்ய வேண்டியது கட்சி தலைமை தான்” என தெரிவித்திருந்தார்.

செல்வப்பெருந்தகை

இதுகுறித்து நம்மிடம் பேசிய அழகிரியின் ஆதரவாளர் ரஞ்சன்குமார், “தலைமை முடிவு செய்ய வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. எங்களுடைய ஒரே கேள்வி.. செல்வப்பெருந்தகைக்கு காங்கிரஸ் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் பதவி கொடுத்திருக்கிறது. இது சாதாரண பதவி இல்லை. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவிக்கு சமமானது. இரண்டாவது அரசு அதிகாரத்துடன் அதிகம் தொடர்புடையது. எனவே இதைவைத்து கட்சிக்கும், கட்சிக்காரர்களுக்கும் செய்தது என்ன?.

குறைந்தபட்சம் பட்டியலின சமூகத்துக்காவது என்ன செய்திருக்கிறார்?. அவர்களின் வாக்கு காங்கிரஸுக்கு கிடைப்பதற்காவது ஏதாவது செய்திருக்கிறாரா?. இல்லை கட்சிக்காக பெரிய பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறாரா. எனவே இவர் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவிக்கு வந்து என்ன செய்யப்போகிறார்?. அமைதியாக இருப்பது தான் நல்லது” என்று கடுப்பானார்.

ரஞ்சன்குமார்

இதுகுறித்து செல்வப்பெருந்தகையிடம் விளக்கம் கேட்டோம், “நான் கேட்டால் தான் என்மீது புகார் அளிக்க வேண்டும். நான் கேட்கவும் இல்லை. யாரும் என்னிடம் தலைவர் பதவி கொடுக்கிறேன் என்றும் சொல்லவில்லை. வீணா என்னை இதுபோல் செய்துவருகிறார்கள். நான் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவராக சிறப்பாக பணியாற்றி வருகிறேன். மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

எதற்கு இதைப்போட்டு உருட்டுகிறார்கள் என்று தெரியவில்லை. ஒன்றும் இல்லாத போது சர்சையை உருவாக்குகிறார்கள். கற்பனையில் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதால் ஒவ்வொருவருக்கும் உரிமை இருக்கிறது. அழகிரி நீடிக்க வேண்டுமா, வேண்டாமா என்பதை தலைமை தான் முடிவு செய்யும் என்று தெரிவித்தேன். எனக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி கொடுத்தால் சிறப்பாக செய்வேன். தேவையில்லாமல் சர்ச்சையை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள்” என்று கொதித்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.