தேசிய விருது : தென்னிந்திய சினிமாவின் வெற்றி தொடரட்டும் – கமல் வாழ்த்து

69வது தேசிய திரைப்பட விருதுகள் டில்லியில் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் தமிழில் சிறந்த படமாக கடைசி விவசாயி தேர்வாகி உள்ளது. அதில் நடித்த நல்லாண்டிக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அல்லு, அர்ஜூன், ஆலியாபட் உள்ளிட்டோரும் விருது பெறுகின்றனர். தேசிய விருது கலைஞர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் நடிகர் கமல்ஹாசன்.

அவர் வெளியிட்ட அறிக்கை : ‛‛69-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த தமிழ்த் படத்திற்கான விருது கடைசி விவசாயிபடத்திற்கும், அதில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய மறைந்த நல்லாண்டிக்கும் ஸ்பெஷல் மென்ஷன் அங்கீகாரமும் கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தயாரிப்பாளர் விஜய் சேதுபதி, இயக்குனர் மணிகண்டன் மற்றும் குழுவினருக்கு என் அன்பும் பாராட்டும்.

சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெறும் முதல் தெலுங்கு நடிகர் எனும் புதிய சரித்திரத்தைப் படைத்திருக்கும் அல்லு அர்ஜூன், சிறந்த படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ‛‛ராக்கெட்ரி தி நம்பி எபெக்ட்'' படத்தின் இயக்குனர் ஆர். மாதவன் மற்றும் குழுவினர், பல பிரிவுகளில் விருதுகளை அள்ளிய ஆர்.ஆர்.ஆர். படத்தின் இயக்குனர் ராஜமவுலி மற்றும் குழுவினர், புஷ்பா திரைப்படத்திற்காக சிறந்த பாடல் இசை பிரிவில் விருது பெற்ற தேவி ஸ்ரீ பிரசாத், இரவின் நிழல் படத்தின் பாடலுக்காக சிறந்த பாடகிவிருது பெற்ற ஷ்ரேயா கோஷல், சிறந்த கல்வித் திரைப்படம் பிரிவில் ‛‛சிற்பங்களின் சிற்பங்கள்'' படத்தை இயக்கி விருது வென்றுள்ள இயக்குநர் பி. எலனின், ‛‛கருவறை'' ஆவணப் படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர் விருது பெற்ற ஸ்ரீகாந்த் தேவா உள்ளிட்ட அனைத்து கலைஞர்களுக்கும் என் மனப்பூர்வமான வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

தென்னிந்திய சினிமா உள்ளடக்கத்திலும், தொழில்நுட்பத்திலும் பல புதிய உச்சங்களை எட்டியதன் அடையாளம் தேசிய விருதுகளின் பட்டியலில் எதிரொலிக்கிறது. இந்த வெற்றி தொடரட்டும்.

இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.