சேலம்: “அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்ற சென்னை உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, நீதிக்கும், உண்மைக்கும், தர்மத்துக்கு கிடைத்திருக்கக்கூடிய தீர்ப்பு. எங்கள் பக்கம் நியாயம் இருந்தது. எனவே, நியாயப்படி எங்களுக்கு தீர்ப்பு கிடைத்துள்ளது” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சேலத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெள்ளிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்ற உயர் நீதிமன்ற தீர்ப்பு குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “நீதி, தர்மம் வென்றுள்ளது. அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவை, இன்றைக்கு நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது. அதிமுக பலமாகத்தான் உள்ளது. நிச்சயமாக அதிமுக, வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெறும். தேசிய அளவில் தேசிய ஜனநாயக கூட்டணியில் நாங்கள் அங்கம் வகிக்கின்றோம். தமிழகத்தைப் பொறுத்தவரையில், தமிழகத்தில் அதிமுக தலைமையில் கூட்டணி இருக்கும். அந்த கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெறும்” என்றார்.
அப்போது பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கியதை எதிர்த்து சசிகலா தாக்கல் செய்த வழக்கு குறித்து கேட்கப்பட்டது, அதற்கு பதிலளித்த அவர், “நீதிமன்றத்தில் அந்த வழக்கு விசாரணைக்கு வரட்டும். வந்தால் பார்த்துக் கொள்ளலாம். இன்று சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள தீர்ப்பு, நீதிக்கும், உண்மைக்கும், தர்மத்துக்கு கிடைத்திருக்கக்கூடிய தீர்ப்பு. எங்கள் பக்கம் நியாயம் இருந்தது. எனவே, நியாயப்படி எங்களுக்கு தீர்ப்பு கிடைத்துள்ளது” என்று அவர் கூறினார்.