கேரள மாநிலத்தின் சபாநாயகர் ஏ.என்.சம்ஷீர் கடந்த மாதம் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, “விநாயகர், புஷ்பக விமானம் என்பதெல்லாம் கட்டுக்கதை. மூடநம்பிக்கை நமது வளர்ச்சியை பின்னுக்குக் கொண்டு சென்றுவிடும். செயற்கை நுண்ணறிவு காலத்தில் இவையெல்லாம் கட்டுக்கதை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்” எனப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
விநாயகர் குறித்து ஆளும் சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த சபாநாயகர் ஏ.என்.சம்ஷீர் கூறிய கருத்துக்குக் கண்டனம் தெரிவித்து நாயர் சர்வோஸ் சொசைட்டி என்ற என்.எஸ்.எஸ் அமைப்பு சார்பில் திருவனந்தபுரத்தில் இம்மாதத் தொடக்கத்தில் நாம ஜப யாத்திரை நடத்தப்பட்டது. இதற்கு பா.ஜ.க ஆதரவு தெரிவித்திருந்தது.

நடிகர் உன்னி முகுந்தனும் சபாநாயகர் சம்ஷீரின் கருத்துக்குப் பதிலடி கொடுத்தார். கொட்டாரக்கரை கணபதி கோயிலில் நடந்த விழாவில் பேசிய உன்னி முகுந்தன், “விநாயகரைக் கட்டுக்கதை எனக் கூறுபவர்கள் நாளை கிருஷ்ணரையும், சிவபெருமானையும் பின்னர் நம்மையும் கட்டுக்கதை எனச் சொல்லுவார்கள். இந்தக் கருத்தை யாருக்காக, யார் கூறுகிறார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்தக் கருத்து வருத்தத்தை அளிக்கிறது என்பதைச் சத்தமாகக் கூறும் அளவுக்காவது நாம் தயாராக வேண்டும். இல்லை என்றால் நமது கொண்டாட்டங்களும், திருவிழாக்களும் அர்த்தமற்றதாகிவிடும். மதிப்பளிக்க வேண்டியாவது கடவுள்களுக்காக நாம் குரல்கொடுக்கத் தயங்கக்கூடாது” எனப் பேசியிருந்தார்.
இதற்கிடையே ‘ஜெய் கணேஷ்’ என்ற பெயரில் ஒரு படம் எடுக்கப்போவதாக ஒற்றப்பாலம் பகுதியில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் நடிகர் உன்னி முகுந்தன் அறிவித்துள்ளார். விநாயகர் குறித்த கருத்துகள் சர்ச்சையானதைத் தொடர்ந்து இந்த படம் எடுக்கப்படுவது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ‘ஜெய் கணேஷ்’ படத்தை ரஞ்சித் சங்கர் இயக்குகிறார். விஷ்ணு சசிசங்கர் இயக்கிய ‘மாளிகப்புறம்’ சினிமாவில் ஐயப்ப சுவாமியாக நடித்திருந்தார் உன்னி முகுந்தன். அதன் பிறகு கடந்த ஏழு மாதங்களாக உன்னி முகுந்தனின் எந்த படமும் வெளியாகவில்லை. சரியான திரைக்கதைக்காகக் காத்திருந்தார் உன்னி முகுந்தன்.

இந்த நிலையில் ஜெய் கணேஷ் படத்தில் விநாயகராக நடிக்கவுள்ளார் உன்னி முகுந்தன். இதுகுறித்து இயக்குநர் ரஞ்சித் சங்கர் கூறுகையில், “‘ஜெய் கணேஷ்’ படத்துக்கான கதையை எழுதிவிட்டு கதாநாயகனுக்கான தேடலில் இறங்கினேன். அதற்கு உன்னி முகுந்தன்தான் சரியான நபர் என்பதைக் கண்டறிந்துள்ளேன். நாங்கள் கதையை விவாதித்தோம். உன்னி முகுந்தனுக்குக் கதை மிகவும் பிடித்துவிட்டது. நாங்கள் இருவரும் சேர்ந்து படத்தை உருவாக்க உள்ளோம்” என்றார்.
‘ஜெய் கணேஷ்’ படம், உன்னி முகுந்தன் பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கப்பட உள்ளது.