புதுடெல்லி: டெல்லியில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டை முன்னிட்டு சமூக வலைதளங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட உள்ளது. டெல்லி காவல்துறை பல்வேறு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவுள்ளது.
மக்களவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் சமூக வலைதளங்களில் மத்திய அரசுக்கு எதிரான கருத்துகள் பரவத் தொடங்கியுள்ளன. இதுபோல் எதிர்க்கட்சிகள் மீதான விமர்சனங்களும் தொடர்கின்றன.
இச்சூழலில், டெல்லியில் அடுத்த மாதம் ஜி20 மாநாடு 2 நாட்களுக்கு நடைபெற உள்ளது. இதில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இச்சமயங்களில் மத்திய அரசின் மீதான விமர்சனங்கள், ஜி20 மாநாட்டின் மீதும் எழும் வாய்ப்புகள் உள்ளதாக கருதப்படுகிறது. எனவே டெல்லி காவல்துறை சார்பில் சமூக வலைதளங்கள் மீதான கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. சமூக வலைதளங்களில் புரளி பரப்புவோரை தடுக்கும் பொருட்டு பல குழுக்கள் அமைக்கப்பட உள்ளன.
இந்த முடிவு, ஜி20 பாதுகாப்பு குறித்து டெல்லி காவல்துறையின் ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது. டெல்லி துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா நடத்திய இக்கூட்டம் குறித்து பல முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜி20 பாதுகாப்பு பணியில் காவல்துறையின் சுமார் 60 துணை ஆணையர்கள் அமர்த்தப்பட உள்ளனர். இச்சமயங்களில் பெண் களுக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு புகார்கள் மீது சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பொருட்டு உடனடி நடவடிக்கை எடுக்க துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
இதனால் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் கூடுதல் போலீஸார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட உள்ளனர். இவர்களுடன், விக்ராந்த் சிறப்பு வாகனங்களும் தயார்நிலையில் வைக்கப்பட உள்ளன. போக்குவரத்து மாற்றங்களும் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன.
மாநாடு நாட்களில் டெல்லி எல்லைகள் ‘சீல்’ செய்யப்பட்டு அத்தியாவசிய தேவை அடிப்படையில் அனுமதி அளிக்கப்படும். மக்கள் அதிகம் கூடும் மால்கள், திரையரங்குகள், புனிதத் தலங்கள், மார்க்கெட்டுகள், தங்கும் விடுதிகள், ரயில் மற்றும் பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும்.
மத்திய படைகளில் ஒன்றானஐடிபிபியின் கேரளா மற்றும் மத்தியபிரதேச பயிற்சி நிலையங்களில் ஸ்வாத் கமாண்டோக்களுக்கான சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதை டெல்லி காவல்துறை சார்பில் பெற்று சமீபத்தில் திரும்பிய 19 பெண் கமாண்டோக்களும் மாநாட்டு பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட உள்ளனர்.