கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் ஜகநாத்பூர் பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். பலர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக 24 நார்த் பர்கானாஸ் பகுதி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில், இன்று காலை 10 மணியளவில் ஜகநாத்பூர் பகுதியில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தன. இந்த விபத்தில் இதுவரை ஐந்து பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. தீ முசுமையாக அணைக்கப்படவில்லை. காயங்களுடன் சிலர் மீட்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீயணைப்பு அதிகாரி கூறுகையில், இதுவரை 5 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. விபத்து நடந்தபோது ஆலையில் நிறைய தொழிலாளர்கள் இருந்துள்ளனர். அதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது என்றார்.
நிகழ்விடத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். 5 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.