பெங்களூரு, ‘மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வீட்டில் பறிமுதல் செய்த பொருட்களை ஏலம் விட முடியாது’ என குறிப்பிட்ட பெங்களூரு நீதிமன்றம், நேற்று சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி மனுவை தள்ளுபடி செய்தது
‘சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை ஏலம் விட வேண்டும்’ என கோரி பெங்களூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இவ்வழக்கை, நீதிபதி எச்.ஏ.மோகன் விசாரித்து வந்தார். பறிமுதல் செய்த பொருட்கள் பட்டியலில் தங்கம், வைரம், பவள நகைகள், செருப்புகள், சேலைகள், சால்வைகள் உட்பட 29 வகையான பொருட்கள் இருந்தன.
இவற்றில், நகைகள் மட்டுமே விதான் சவுதா கருவூலத்தில் இருப்பதாகவும், மற்ற பொருட்கள் பாஸ்கரன் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாகவும், தமிழக லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே நீதிபதி உத்தரவின்படி, பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களின் பட்டியலை, தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார், நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தனர்.
அப்போது, ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரது முடக்கப்பட்ட வங்கி கணக்கில் இருக்கும் பணத்தின் தற்போதைய மதிப்பு குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி, நீதிபதி மோகன் உத்தரவிட்டார்.
மேலும், ‘ஜெயலலிதாவின் சேலைகள், செருப்புகள் உட்பட பல்வேறு பொருட்கள், சட்ட விரோதமாக சேர்க்கப்பட்ட சொத்துகள் பட்டியலில் இடம்பெறாத நிலையில், அவற்றை ஏலம் விட முடியாது’ என்றும் கூறிய நீதிபதி, நரசிம்மமூர்த்தியின் மனுவை தள்ளுபடி செய்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement