சென்னை: மின்பயன்பாட்டைக் கணக்கெடுக்க உதவும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை தமிழகம் முழுவதும் செயல்படுத்த, மின்வாரியம் டெண்டர் கோரியுள்ளது.
வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சாரத்தைக் கணக்கெடுக்க ஸ்டேடிக் மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. 2 மாதங்களுக்கு ஒருமுறை மின்வாரிய ஊழியர்கள் வீடுகளுக்கு நேரில் சென்று மின் பயன்பாட்டைக் கணக்கெடுத்து வருகின்றனர். இதில் சில சமயங்களில் தவறுகள் நடப்பதால் நுகர்வோர் பாதிக்கப்படுகின்றனர்.
இப்பிரச்சினைக்குத் தீர்வுகாணும் வகையில், ஆளில்லாமல் மின்பயன்பாட்டைக் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட உள்ளன. இந்த மீட்டரில் தகவல் தொடர்பு கருவிகள் பொருத்தப்பட்டு, தொலைத்தொடர்பு வசதியுடன் கூடிய மின்வாரிய சர்வருடன் இணைக்கப்படும்.
எந்த தேதியில் கணக்கெடுக்க வேண்டும் என்ற விவரம் மென் பொருள் வடிவில் மீட்டரில் பதிவேற்றம் செய்யப்படும். இதனால், அந்த தேதி வந்ததும் தானாகவே மின்பயன்பாடு கணக்கெடுக்கப்பட்டு நுகர்வோரின் செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பப்படும்.
முதற்கட்டமாக, சென்னை, தி.நகரில் உள்ள 1.42 லட்சம்மின் இணைப்புகளில் பரிசோதனை முயற்சியாக ஸ்மார்ட்மீட்டர் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதையடுத்து, தற்போது தமிழகம் முழுவதும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தைச் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக, சென்னை உட்பட வடமாவட்டங்கள் தவிர்த்து, மற்ற மாவட்டங்களில் 3 தொகுப்புகளாக 1.82 கோடி ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணிக்கு நிறுவனத்தை தேர்வு செய்ய கடந்த ஜுன் மாதம் டெண்டர் கோரப்பட்டது. இதில் பங்கேற்ற 30-க்கும்மேற்பட்ட நிறுவனங்கள் 265 சந்தேகங்களை எழுப்பின. எனவே, மின்வாரியம் அந்த டெண்டரை ரத்துசெய்து விட்டு தற்போது புதிய டெண்டர் கோரியுள்ளது.
இந்த டெண்டரில் மாநிலம் முழுவதும் அனைத்து இணைப்புகளிலும் பொருத்த 3.03 கோடி ஸ்மார்ட் மீட்டர் வாங்க கோரப்பட்டுள்ளது. டெண்டரில் தேர்வுசெய்யப்படும் நிறுவனம், மீட்டர்களைப் பொருத்துவது, தகவல்தொடர்பு வசதியை ஏற்படுத்து வது, ஒருங்கிணைப்பது, பராமரிப்பது என அனைத்துப் பணிகளையும் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் செய்ய வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்த ஆண்டு இறுதிக்குள் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணி தொடங்கப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.