மாணவனை அடித்த பவுன்சர்கள்; 'சந்திரமுகி 2' சர்ச்சை

தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் திரைப்பட விழாக்கள் சமீப காலங்களில் அதிகமாக நடந்து வருகிறது. உயர் கல்வி படிக்க வரும் கல்விக் கூடங்களில் இப்படியான சினிமா விழாக்களை நடத்துவது குறித்து கல்வியாளர்கள் அவர்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகிறார்கள். ஆனால், இப்படியான விழாக்களை நடத்துவதற்கு தடை விதிக்க சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களோ, உயர் கல்வித் துறையோ இதுவரையிலும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ராகவா லாரன்ஸ், வடிவேலு, கங்கனா ரணாவத் மற்றும் பலர் நடிக்க பி.வாசு இயக்கத்தில் உருவாகியுள்ள 'சந்திரமுகி 2' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று முன்தினம் சென்னையில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரி ஒன்றில் நடைபெற்றது. அப்போது நடிகர், நடிகைகளின் பாதுகாப்புக்காக வந்திருந்த பவுன்சர்கள் அந்த கல்லூரி மாணவர் ஒருவரைத் தாக்கிய சம்பவம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு அப்பாவி மாணவரை ஐந்தாறு பவுன்சர்கள் ஒன்று சேர்ந்து சரமாரியாகத் தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. படத் தயாரிப்பு நிறுவனமான லைக்காவின் லோகோ அடங்கிய டீ ஷர்ட்டுகளை அணிந்து அவர்கள் தாக்கியுள்ளது அந்த நிறுவனத்தின் அத்துமீறல் என பலரும் கண்டனம் தெரிவிக்கிறார்கள். இது குறித்து தயாரிப்பு நிறுவனமோ, அல்லது ராகவா லாரன்ஸ் உள்ளிட்டவர்ளோ எந்த ஒரு அறிக்கையும் தராமல் இருக்கிறார்கள்.

பாதுகாப்பு என்ற பெயரில் பவுன்சர்கள் எப்படி இப்படி நடந்து கொள்ளலாம் என கேள்வியும் எழுகிறது. மாணவர்களை அடிக்கும் உரிமையை அவர்களுக்கு யார் தந்தது?. இனிமேலாவது கல்லூரிகளில் திரைப்பட விழாக்களை நடத்த அரசு தடை விதிக்கும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.