கடலூரில் பாமக பொதுக்கூட்டமா? – கைவிரித்த தமிழக அரசு.. அதிரடி உத்தரவு போட்ட உயர்நீதிமன்றம்!

பாமகவின் 35வது அண்டு விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 30ஆம் தேதி (இன்று) கடலூர் மாவட்டம் வடலூரில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டு அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் முத்துகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், “பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கேட்டு நெய்வேலி டிஎஸ்பியிடம் விண்ணப்பம் அளித்தோம். ஆனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது எனக் கூறி எங்களது கோரிக்கையை நிராகரித்துவிட்டார். ஆகவே, பொதுக்கூட்டத்திற்கு அனுமதி தர காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும்” என்று வலியுறுத்தி இருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த வெங்கடேசன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.பாலு, “பாமக ஆரம்பிக்கப்பட்டு பல ஆண்டுகளாக அமைதியான முறையில் பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறோம். அனைத்து ஏற்பாடுகளும் முடிந்துவிட்ட நிலையில், பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வடலூர் சந்திப்பில் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்கவில்லை எனில் குள்ளஞ்சாவடி பகுதியிலாவது நடத்த அனுமதிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

அரசு தரப்பில் ஆஜரான குற்றவியல் வழக்கறிஞர் தாமோதரன், “என்.எல்.சியை எதிர்த்து போராட்டம் நடத்தியபோது 27 பேருந்துகள் உடைக்கப்பட்டு, அதுதொடர்பாக வழக்குகள் பதிவாகியுள்ளன. இதன்மூலம் கட்சியில் செயல்பாடுகள் வெளிப்பட்டுள்ளது. தற்போது அதே இடத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்கிறார்கள். அப்படி அனுமதி கொடுத்தால் சட்டம் – ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, கடலூர் மாவட்டத்திற்கு வெளியே பொதுக்கூட்டம் நடத்தினால் அனுமதிக்க தயாராக உள்ளோம்” என்றார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, பொதுக்கூட்டம் நடத்தும் அரசியல் கட்சிகளின் உரிமையை தடுக்க முடியாது. அதே சமயம் சட்டம் – ஒழுங்கு பிரச்னை தொடர்பான காவல் துறையின் அச்சத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும். எனவே, கடலூர் மாவட்டத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதிக்க முடியாது என அதிரடியாக உத்தரவிட்டார். மேலும், விழுப்புரம் அல்லது கள்ளக் குறிச்சியில் பொதுக்கூட்டம் நடத்த முடிவெடுத்து காவல்துறையை அணுகலாம் என்று அறிவுறுத்தினார்.

ஆனால், இதனை பாமக தரப்பு ஏற்க மறுத்துவிட்டது. கடலூரில்தான் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், வேறு மாவட்டத்தில் நடத்த விருப்பமில்லை என்றும் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளதாகவும் பாமக வழக்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.