பாஜகவை பாம்புடன் ஒப்பிட்ட உதயநிதி: மோடியின் நண்பர் குறித்தும் பேச்சு!

2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல் ஆகியவற்றில் திமுக சார்பாக மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்தார்

. திரைப்பட நடிகர், ஸ்டாலினின் மகன் ஆகிய காரணிகளால் மக்கள் கூட்டம் நன்றாக கூடியது. கலைஞர், ஸ்டாலின் ஆகியோர் போல் கம்பீரமாக முழங்காவிட்டாலும் யதார்த்தமாக பேசி கவனம் பெற்றார்.

ஆரம்பத்தில் மென்மையாக எதிர் தரப்பை கலாய்த்து கவனம் பெற்று வந்த உதயநிதி தற்போது தனது பேச்சில் அதிரடி காட்டி வருகிறார். அதிலும் நீட் தேர்வு குறித்து பேசத் தொடங்கினால் மோடியையும் பாஜகவையும் காரசாரமாக விமர்சிக்கிறார்.

கடலூர் மாவட்ட ஒருங்கிணைந்த இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “நீட் தேர்வுக்கு எதிராக அனைத்துக் கட்சிகளும் ஒன்றாக இணைந்து போராடுவோம், வெற்றி பெறுவோம், வெற்றி கிடைத்தால் அதனை முழுவதும் நீங்களே ஏற்றுக்கொள்ளுங்கள் என எடப்பாடி பழனிசாமியிடம் சவால் விடுத்தேன். ஆனால் இதுவரை பதில் இல்லை” என்று அதிமுகவை ஒரு கை பார்த்தார்.

அதன்பின்னர் பாஜக பக்கம் நகர்ந்த அவர், “நீட் தேர்வை எதிர்த்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறேன். தமிழ்நாடு எனும் வீட்டில் விஷப்பாம்பு எனும் பாஜக, அதிமுக மூலம் நுழையப் பார்க்கிறது. அதனை விரட்டி அடிக்க வேண்டும்.

பாஜகவை ஒழிக்க வேண்டும் என்றால் அதிமுகவையும் ஒழிக்க வேண்டும்

நாங்கள் மோடிக்கும் பயப்பட மாட்டோம். EDக்கும் பயப்பட மாட்டோம். மோடியின் ஒன்பது ஆண்டுகால ஆட்சியில் வாழ்ந்தது அவரது நண்பர் அதானி ஒருவர் தான். பிரதமர் நரேந்திர மோடி விமானி இல்லாமல் கூட போவார், ஆனால் அதானி இல்லாமல் போக மாட்டார்” என்று பேசினார்.

தனது துறை சார்ந்து பேசிய அவர், “தேசிய விளையாட்டு தினமான இன்று விளையாட்டு வீரர், வீராங்கனையர் உள்ளிட்ட அனைவருக்கும் என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாடு விளையாட்டிலும் நம்பர் 1 என்ற இலக்கை நோக்கி பயணிக்க உறுதி ஏற்போம். முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாட்டை இந்திய துணைக் கண்டத்தின் விளையாட்டுத் தலைநகராக மாற்ற நாள்தோறும் உழைத்து வருகிறோம்.

விளையாட்டுத்துறைக்கு தனி அமைச்சகத்தை கலைஞர் கருணாநிதி தொடங்கினார். பன்னாட்டு போட்டிகள், தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை, சர்வதேச விளையாட்டு நகரம் என இன்னும் ஏராளமான திட்டங்களை தீட்டி நம் முதலமைச்சர் அவற்றை வளர்த்தெடுத்து வருகிறார்” என்று கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.