புதுடில்லி, ரயில்களில் பொது பெட்டிகளில் ஏற்படும் கூட்ட நெரிசலை தடுக்கும் வகையில், பயணியர் குறைவாக உள்ள முன்பதிவு செய்யப்பட்ட ஸ்லீப்பர் பெட்டிகளை, முன்பதிவு செய்யாத பொது பெட்டிகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கும்படி, மண்டல அதிகாரிகளுக்கு ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து, ரயில்வே மூத்த அதிகாரி ஒருவர் நேற்று கூறியதாவது:
அனைத்து ரயில் நிலையங்களிலும், ரயில் வந்து புறப்படும் வரை கவுன்டரில் டிக்கெட் வழங்கப்படுவதால், முன்பதிவு செய்யப்படாத பொது பெட்டிகளில் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது.
அதோடு, கடந்த சில ஆண்டுகளாக, மூன்றடுக்கு ‘ஏசி’ பெட்டிகளுக்கு பயணியரிடையே நல்ல வரவேற்பு இருந்ததால், பொது பெட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதாலும், இவற்றில் தற்போது கூட்ட நெரிசல் ஏற்படுகிறது.
இதை தடுப்பதற்காக, அனைத்து வழித்தடங்களிலும் பயணியர் குறைவாக உள்ள ஸ்லீப்பர் பெட்டிகளை, முன்பதிவு செய்யாத பொது பெட்டிகளாக மாற்ற முடிவு செய்துஉள்ளோம்.
குறிப்பாக, பகல் நேர ரயில்களில், பயணியர் குறைவாக உள்ள முன்பதிவு செய்யப்பட்ட ஸ்லீப்பர் பெட்டிகளை கண்டறிந்து அறிக்கை அளிக்கும்படி, மண்டல அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த ஸ்லீப்பர் பெட்டிகளை, முன்பதிவு செய்யாத பொது பெட்டிகளாக மாற்றுவதன் வாயிலாக, உள்ளூர் மற்றும் தினசரி பயணிக்கும் பயணியர் பயன் அடைவர். இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement