அமீர் நடித்த ‘யோகி’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் யோகி பாபு. பிஸியான காமெடி நடிகரான இவர், மடோன் அஸ்வினின் ‘மண்டேலா’ படத்தின் மூலம் பிரபல நடிகராக மாறி இன்று பல மொழிப் படங்களில் காமெடியனாகவும், கதாநாயகனாகவும் வலம் வரத் தொடங்கியிருக்கிறார்.
அந்தவகையில் யோகிபாபு தற்போது பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் ‘லக்கிமேன்’ எனும் படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் செப்டம்பர் 1ம் தேதி வெளியாகவுள்ளது. இதையொட்டி இன்று இப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

பேசிய யோகி பாபு, “என் வாழ்க்கையில நான் அன்-லக்கியாத்தான் (UnLucky) சுத்திட்டு இருந்தேன். 23 ஆண்டுகளாக இந்த சினிமாவில் நடிச்சிட்டிருக்கேன். சமீபத்தில எனக்குக் கிடைச்ச நல்ல இயக்குநர்களால இப்போ நான் லக்கிமேனாகிட்டேன். இந்தப் படம் எனக்காகவே பண்ணதுதான். பாலாஜி வேணுகோபால் என்னிடம் வரும் போது அவர் எதிர்காலம் கேள்விக்குறியாக இருந்தது. என்னிடம் வரும் ஒவ்வொரு இயக்குநரிடமும் கதை கேட்டு படம் பண்ண மாட்டேன், அவர்கள் படும் கஷ்டத்தைக் கேட்டுதான் படம் பண்ணுவேன்” என்றார்.
மேலும், “எனக்குச் சோறு போட்டது காமெடிதான் என்னோட கடைசிக் காலம் வரை காமெடியனாகத்தான் இருப்பேன். எல்லா மொழிகளிலும் காமெடியனாக நடிக்க வாய்ப்புகள் வந்துகொண்டுதான் இருக்கிறது. பாலாஜி, மடோன் அஸ்வின் மாதிரியான இயக்குநர்கள் எனக்கு நல்ல படம் கொடுத்திருக்காங்க. அதுபோல நல்ல கதைகள் வந்தால் அதற்காக நேரம் ஒதுக்கி கதாநாயகனாகப் படம் பண்ணுவேன். எதற்காகவும் காமெடியனாக நடிப்பதை விட்டுவிட மாட்டேன்” என்று கூறியுள்ளார்.