அடுத்த மாதம் ரஜினியின் `தலைவர் 170′, விஜய்யின் `தளபதி 68′ படங்களின் படப்பிடிப்புகள் கோலாகலமாக ஆரம்பமாகின்றன. வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் தோற்றத்திற்காக, அவர் அமெரிக்கா சென்றிருக்கிறார் என்றெல்லாம் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் நடித்து முடித்த `லியோ’வின் இசை வெளியீட்டு விழா குறித்து விசாரித்தோம்.

விஜய்யின் ‘லியோ’ இசை வெளியீட்டை விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாது, திரையுலகினரும் பெரிதும் எதிர்பார்த்துள்ளனர். விஜய் அரசியலில் குதிக்கிறார், அடிக்கடி மாவட்ட நிர்வாகிகளைச் சந்திக்கிறார்… வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்த உள்ளார் என்பது போன்ற தகவல்களும், ‘தளபதி 68’ படத்திற்குப் பின் சில ஆண்டுகள் நடிப்பிலிருந்து ஓய்வு எடுக்கிறார் என்றெல்லாம் செய்திகள் இருப்பதால், ‘லியோ’ விழாவில் விஜய் என்ன பேசப்போகிறார் என்ற பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. சமீபத்திய ‘ஜெயிலர்’ இசை வெளியீட்டு விழாவில் ரஜினியே ‘சூப்பர் ஸ்டார்’ பட்டம் குறித்துப் பேசியதும் விவாதத்தைக் கிளப்பியது என்பதால் விஜய்யின் ரசிகர்கள் ‘லியோ’ விழாவில் இதற்கெல்லாம் பதில் கிடைக்கும் என எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.
‘வாரிசு’ தயாரிப்பாளர் தில்ராஜ் கிளப்பிய சூப்பர் ஸ்டார் பேச்சுக்கு, அதன் இசை வெளியீட்டு விழாவில் விஜய்யே, “1990 காலகட்டத்தில் எனக்கொரு போட்டியாளர் இருந்தார். அவர் கொஞ்சம் கொஞ்சமாக சிரீயஸான போட்டியாளராக மாறினார். அவர்மேல் இருந்த போட்டி பயத்தால் நானும் வளர்ந்து கொண்டே இருந்தேன். அந்த மாதிரி ஒரு போட்டியாளர் உங்களுடைய வாழ்க்கையிலும் இருக்கணும். அந்தப் போட்டியாளர் பெயர் ஜோசப் விஜய்!” என்று பேசினார். இப்போது ரஜினியே சூப்பர் ஸ்டார் பற்றிப் பேசியிருப்பதால், விஜய்யின் பேச்சில் இதற்கான பதில் இருக்கும். அது ‘லியோ’வின் தாறுமாறான வெற்றிக்கு வழி வகுக்கும் என எதிர்பார்க்கின்றனர்.

‘லியோ’வின் இசைவெளியீட்டை முதலில் மலேசியாவில் நடத்தத் திட்டமிட்டனர். ஆனால் ‘வேலாயுதம்’ படத்தின் விழாவைப் போல மதுரையில் பிரமாண்டமாக நடத்தலாமா என்றும் யோசித்தனர். அது கட்சி மாநாடு போலப் பெயரெடுத்துவிடக்கூடாது என்பதால், சென்னையிலேயே விழாவை நடத்திவிடத் தீர்மானித்துள்ளனர். வரும் அக்டோபர் 19ல் படம் திரைக்கு வருவதால் விழாவை அடுத்த மாதம் (செப்டம்பர்) இறுதி வாரத்திற்குள் நடத்திவிடத் திட்டமிட்டுள்ளனர். அநேகமாக செப்டம்பர் 23 அல்லது 30 தேதிகளில், எதாவது ஒரு தேதியில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறலாம் என்கிறார்கள். சஞ்சய் தத்தில் இருந்து அனுராக் காஷ்யப் வரை படத்தில் நடித்த அத்தனை பேரும் விழாவில் பங்கேற்க உள்ளனர்.