“சனாதனம் குறித்து 200 ஆண்டுகளாகப் பேசுகிறோம்… இனியும் பேசுவோம்!” – அமைச்சர் உதயநிதி

கடலூர் மாவட்டம், நெய்வேலி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ சபா. ராஜேந்திரன் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு பேசிய விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா.ராஜேந்திரனின் இல்லத் திருமண விழா ஒரு சுயமரியாதை திருமணமாகும். ஒரு மாநாட்டைப்போல திருமணம் நடந்து கொண்டிருக்கிறது. அ.தி.மு.க-வில் ஓ.பி.எஸ் அணி, இ.பி.எஸ் அணி, சசிகலா அணி, தீபா அணி, தீபா டிரைவர் அணி என பல அணிகள் இருக்கின்றன. அதுபோல் குடும்ப வாழ்க்கையில் மாமியார் அணி, நாத்தனார் அணி என பல அணிகளாகப் பிரிந்து இருக்கக்கூடிய வாய்ப்புகள் வரும். ஆனால் அதையெல்லாம் சமாளித்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணி போன்று, மணமக்கள் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு சுய மரியாதையுடன் வாழ வேண்டும்.

அமித் ஷா – நரேந்திர மோடி

ஆணுக்கு பெண் சமம் என்று சொன்னதுதான் நம் திராவிட இயக்கம். பெண்களுக்கு சொத்தில் சம பங்கு, உள்ளாட்சித் தேர்தலில் 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு, கல்வி உதவித்தொகை, மகளிர் உரிமைத்தொகை, பணியில் இட ஒதுக்கீடு என பல திட்டங்களை தந்தது தி.மு.க-தான். சனாதன ஒழிப்பு மாநாட்டில் நான் கலந்துகொண்டு பேசியது ஒருநாள் செய்திதான். அதை பொய்யாக திரித்து பிரதமர் மோடியும், ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவும் இந்திய அளவில் பேச வைத்துவிட்டார்கள். நூறு ஆண்டுகளுக்கு முன் பெண்கள் யாரும் வெளியில் வர முடியாத சூழ்நிலை இருந்தது. மருத்துவம் படிக்க முடியாத சூழல் நிலவியது. அதனையும் மீறி படிக்க வேண்டும் என்றால் சம்ஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும்.

கணவன் இறந்தவுடன் உடன்கட்டை ஏறும் பழக்கமும் இருந்தது.  அவற்றையெல்லாம் உடைத்து எறிந்தது தி.மு.க-தான். அதைப்பற்றியெல்லாம் அம்பேத்கர், பெரியார், அண்ணா, கலைஞர் ஆகிய தலைவர்கள் நிறைய கருத்துகளை கூறியுள்ளனர். அவர்கள் பேசாத எதையும் நான் பேசவில்லை. ஒன்பது ஆண்டுக்கால பா.ஜ.க ஆட்சியில் இதுவரை என்ன சாதித்தீர்கள் என்று கேட்டதற்கு, இந்தியாவை மாற்றிக் காட்டுகிறேன் என்றார் பிரதமர் மோடி.  தற்போது இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றியுள்ளார். இதைத் தவிர வேறு எந்த திட்டங்களையும் செய்யவில்லை. சனாதனத்தை பற்றி நாங்கள் இப்போது பேசவில்லை. 200 ஆண்டுகளாகப் பேசி வருகிறோம்,

தி.மு.க அமைச்சர் உதயநிதி

இனியும் தொடர்ந்து பேசுவோம். திராவிடர் கழகம் ஆரம்பிக்கப்பட்டதே சனாதனத்தை ஒழித்து சமூகநீதியை நிலை நாட்டத்தான். இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும் தொடர்ந்து சனாதனத்தை ஒழிப்பதற்காக குரல் கொடுப்போம். ஜி20  மாநாடு நடைபெறும் இடத்தில் இருந்த குடிசைகளை திரைபோட்டு மூடியதுதான் மத்திய அரசின் சாதனை. ஒரு கிலோமீட்டர் சாலை போடுவதற்கு ரூ.250 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. மருத்துவ காப்பீடு திட்டத்தை அறிவித்து, ரமணா திரைப்படத்தில் வருவதைப்போல இறந்தவர்களுக்கு வைத்தியம் பார்த்து பணத்தை பிடுங்கியுள்ளனர். பா.ஜ.க-வின் ஊழல்கள் ஒவ்வொன்றாக வெளிப்பட்டு வருகின்றன. அவற்றை மறைக்கவே சனாதனம் குறித்து தவறாகப் பேசி வருவதாக என்மீது அவதூறு பரப்புகின்றனர்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.