புதுடில்லி: அமெரிக்க அதிபரின் கான்வாயில் செல்ல தேர்வாகியிருந்த கார், திடீரென சவுதி பட்டத்து இளவரசர் தங்கியிருந்த ஓட்டலுக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜி20 மாநாடு டில்லியில் இரண்டு நாட்கள் நடந்தது. இதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் உள்ளிட்ட தலைவர்கள் டில்லி வந்துள்ளனர். முகமது பின் சல்மான், டில்லியின் தாஜ் ஓட்டலில் தங்கியிருந்தார். ஜோ பைடன், ஐடிசி மவுரியா ஓட்டலில் தங்கியிருந்தார். மாநாட்டை முன்னிட்டு, டில்லியில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
இந்நிலையில், ஜோ பைடன் செல்லும் கான்வாயில் இடம்பெற டில்லியை சேர்ந்த கார் ஒன்று தேர்வாகியிருந்தது. ஆனால், அந்த கார் திடீரென தாஜ் ஓட்டலுக்கு எந்தவித முன்னறிவிப்பும் இன்றி வந்தது. இதனால், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக, பாதுகாப்பு படையினர், காரை ஓட்டி வந்தவரையும், அதில் இருந்த தொழில் அதிபரையும் பிடித்து விசாரித்தனர்.
அவர்களிடம் டிரைவர் கூறியதாவது: கான்வாயில் செல்ல காலை 9:30 மணிக்கு ஐடிசி மவுரியா ஓட்டலுக்கு வரும்படி கூறியிருந்தனர். ஆனால், அதற்கு நீண்ட நேரம் இருந்தது. இதனால் காலை 8 மணிக்கு மற்றொரு வாடிக்கையாளரை அழைத்துக் கொண்டு வந்தேன். இங்கிருந்து பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து எனக்கு தெரியாது. இவ்வாறு அவர் கூறினார். விசாரணைக்கு பிறகு அந்த கார் டிரைவரை பாதுகாப்பு படையினர் விடுவித்தனர்.
ஆனால், அந்த கார் ஜோ பைடன் கான்வாயில் செல்லும் வாய்ப்பு அதிகாரிகள் பறித்துவிட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement