IND vs PAK: ரிசர்வ் டேவுக்கு தள்ளிப்போன போட்டி… நாளையும் மழை வந்தால் என்ன நடக்கும்?

India vs Pakistan Reserve Day: கிரிக்கெட் ரசிகர்களுக்கு மீண்டும் ஏமாற்றும் அளிக்கும் வகையில் இந்தியா – பாகிஸ்தான் போட்டி மழையால் தடைப்பட்டுள்ளது. குரூப் சுற்று போட்டி மழையினால் முடிவின்றி ரத்து செய்யப்பட்டது. அந்த போட்டியில் இந்தியா முழுவதுமாக பேட்டிங் செய்த நிலையில், ஒரு பந்துக்கூட வீசாமல் போட்டி நிறுத்தப்பட்டது. 

களத்தில் விராட், ராகுல்

இன்றைய போட்டியிலும் மழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டது. அந்த வகையில் ஆசிய கோப்பை தொடரில் மற்ற போட்டிகளுக்கு இல்லாத வகையில், இந்த போட்டிக்கு மட்டும் நாளைய தினம் (செப். 11) ரிசர்வ் டே ஆக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்திய அணி 24.1 ஓவர்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களை எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. ஷதாப் கான், அப்ரிடி ஆகியோர் தலா 1 விக்கெட்டை எடுத்தனர். விராட் 8 ரன்களுடனும், ராகுல் 17 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணியின் ஓப்பனர்களான ரோஹித் சர்மா 56 ரன்கள் எடுத்தும், கில் 58 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர். 

மழை தற்போது நின்றுவிட்டாலும் மைதானத்தில் மழை நீர் தேங்கியிருப்பதால் போட்டி தொடங்க தாமதாம் ஏற்பட்டது. போட்டி ஒருவேளை இன்று தொடங்கப்பட்டால் ஓவர்கள் குறைக்கப்படும் என கூறப்பட்டது. ஏனென்றால், இன்றே போட்டியின் முடிவை எட்டிவிட வேண்டும் என்பதே இரு அணிகளின் கோரிக்கையாக இருந்தது.

ரிசர்வ் டே

மேலும், இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு மைதானம் நடுவர்களால் பார்வையிடப்படுவதாக இருந்தது. அந்த சமயத்தில் மீண்டும் மழை பெய்தால் இன்றைய ஆட்டம் கைவிடப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை ரிசர்வ் டேவில் போட்டி நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது. மேலும் போட்டி ஓவர்கள் குறைக்கப்படாமல், இன்று நிறுத்தப்பட்ட அதே இடத்தில் இருந்தே மீண்டும் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாளை ஆட்டமும் மதியம் 3 மணியளவில் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

UPDATE – Play has been called off due to persistent rains

See you tomorrow (reserve day) at 3 PM IST!

Scorecard https://t.co/kg7Sh2t5pM #TeamIndia | #AsiaCup2023 | #INDvPAK pic.twitter.com/7thgTaGgYf

— BCCI (@BCCI) September 10, 2023

தி வெதர் சேனலின் படி, கொழும்பில் இறுதிப்போட்டி நடைபெறும் செப்டம்பர் 17ஆம் தேதி வரை தினமும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் செப்டம்பர் 11ஆம் தேதியான நாளையும், மழைக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மழைப்பொழியும் வாய்ப்பு 99 சதவீதமாகவும், இடியுடன் கூடிய மழையின் நிகழ்தகவு 59 சதவீதமாகவும் உள்ளது. பகலில் ஆறு மணி நேரம் மழை தொடரும் என்றும் கூறப்படுகிறது.

Atleast tomorrow can the match start early ? Else there are high chance of fate like today#IndvsPak

— Tamil Nadu Weatherman (@praddy06) September 10, 2023

மேலும் இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் அவரது X பக்கத்தில்,”குறைந்தபட்சம் நாளை போட்டியை முன்கூட்டியே தொடங்க முடியுமா? இல்லையெனில், இன்று போல் மழை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்” என பதிவிட்டுள்ளார். அவர் கூறியது போல் பகலிரவு ஆட்டமாக இல்லாமல் பகலிலேயே ஆட்டத்தை தொடங்குவது போட்டியில் மழையில் இருந்து காப்பற்றலாம் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்தியாவுக்கு நாளை மறுதினம் இலங்கை அணியுடன் இதே மைதானத்தில் போட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.