புதுடில்லி, ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல், பாரிஸ் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில், இந்தியாவுக்கும், ஹிந்துக்களுக்கும் எதிராக தொடர்ச்சியாக எழுதி வரும் எழுத்தாளர் கிறிஸ்டோப் ஜாபர்லோ உடன், ஒரே மேடையில் அமர்ந்து கலந்துரையாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.,யுமான ராகுல், ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
குற்றச்சாட்டு
பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரிஸ் பல்கலையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ராகுல், மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த எழுத்தாளரும், கட்டுரையாளருமான கிறிஸ்டோப் ஜாபர்லோ, ராகுலுடன் ஒரே மேடையில் அமர்ந்திருந்தார்.
அவருடன் ராகுல் கலந்துரையாடினார். இந்த சம்பவம் இந்தியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காரணம், பிரெஞ்ச் எழுத்தாளர் கிறிஸ்டோப், இந்தியாவுக்கும், ஹிந்துக்களுக்கும் எதிராக தொடர்ச்சியாக எழுதி வருகிறார்.
அவர் எழுதிய, ‘மோடிஸ் இந்தியா: ஹிந்து நேஷனலிசம் அண்ட் தி ரைஸ் ஆப் எத்தினிக் டெமாக்ரசி’ என்ற புத்தகத்தில், பிரதமர் நரேந்திர மோடி இரண்டு முறை தொடர்ச்சியாக ஆட்சியில் அமர்ந்தது குறித்து அதிருப்தியை பகிரங்கமாக வெளிப்படுத்தி இருந்தார்.
பிரதமர் மோடி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நலத்திட்டங்களை வசதியாக மறந்துவிட்டு, பா.ஜ., ஆட்சியில் முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இல்லை என குற்றஞ்சாட்டி உள்ளார்.
இதற்கு ஹிந்துக்களின் மத உணர்வே முழு காரணம் என்றும் ஹிந்துக்களை குற்றஞ்சாட்டி உள்ளார்.
கொந்தளிப்பு
மேலும் அவர் வெளிப்படுத்தி உள்ள பல்வேறு கருத்துக்களும், அருவருக்கத்தக்க வகையில் உள்ளன. அவை இந்தியாவில் பிளவை ஏற்படுத்தும் நோக்கத்துடன் எழுதப்பட்டுள்ளன.
வெளிநாடுகளுக்கு செல்லும் போதெல்லாம் இந்தியா குறித்தும், ஹிந்துக்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவிக்கும் ராகுல், இந்தமுறை, இந்தியாவுக்கு எதிரான நபருடன் ஒரே மேடையை பகிர்ந்து கொண்டது இந்தியர்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
‘பாரத் பெயர் ஏற்கக்கூடியதே!’
பாரிஸ் பல்கலையில் மாணவர்களுடன் கலந்துரையாடும் போது, இந்தியாவின் பெயர், பாரத் என மாற்றப்படுவது குறித்து, ராகுலிடம் மாணவர்கள் கேள்வி எழுப்பினர்.அதற்கு ராகுல் அளித்த பதில்:இந்திய அரசியலமைப்பில், இந்தியா, பாரத் என்ற இரண்டு பெயருமே இடம் பெற்றுள்ளன. எனவே இரண்டுமே ஏற்றுக்கொள்ளக் கூடியது தான். இதில் எவ்வித பிரச்னையும் இல்லை. ஆனால், எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு, ‘இண்டியா’ என நாங்கள் பெயரிட்டது ஆளுங்கட்சியை எரிச்சல் அடைய செய்துள்ளது. எனவே அவர்கள் நாட்டின் பெயரை மாற்ற முடிவு செய்திருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்