காஞ்சிபுரம் பட்டு | ஜப்பான் பிரதமரின் மனைவிக்கு பிரதமர் மோடி கொடுத்த பரிசு

புதுடெல்லி: ஜப்பான் பிரதமரின் மனைவிக்கு பிரதமர் நரேந்திர மோடி காஞ்சிபுரம் பட்டுப் புடவையை பரிசாக அளித்துள்ளார்.

ஜி20 உச்சி மாநாடு புதுடெல்லியில் கடந்த சனி மற்றும் ஞாயிறு அன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற உலக நாடுகளின் தலைவர்களுக்கு இந்தியா சார்பில் பிரதமர் நரேந்திர மோடி பரிசுகளை வழங்கினார். இந்த மாநாட்டை ஒட்டி குடியரசுத் தலைவர் அளித்த இரவு விருந்திற்கு ஜப்பான் பிரதமரின் மனைவி யூகோ கிஷிடா, புடவை அணிந்து வந்திருந்தார். இந்நிலையில், அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி காஞ்சிபுரம் பட்டுப் புடவையை பரிசாக அளித்துள்ளார்.

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “காஞ்சிபுரம் பட்டுப் புடவைகள் இந்திய நெசவுத் தொழிலின் தலைசிறந்த படைப்பாகும். செழுமையான, ஒளிரும். வண்ணங்கள், நுட்பமான வடிவமைப்புகள், ஒப்பில்லா கைவினைத்திறன் ஆகியவற்றிற்கு அவை பெயர் பெற்றவை. ‘காஞ்சிவரம்’ என்ற பெயர், பட்டு நெவுக்குப் பெயர் பெற்ற ஒரு தென்னிந்திய நகரமான தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தைக் குறிப்பதாகும்.

காஞ்சிவரம் பட்டாடை, தங்கள் மூதாதையர்களிடமிருந்து பாரம்பரியத்தையும் நுட்பங்களையும் பெற்ற திறமையான நெசவாளர்களால் தூய மல்பெரி பட்டு நூல்களிலிருந்து நெய்யப்பட்ட கைவினைப்பொருளாகும். இது மிகவும் நீடித்து உழைக்கக்கூடிய வலுவான துணியாகும். அதே நேரத்தில், இது ஒரு ராணிக்குரிய நேர்த்தியையும், நுட்பத்தையும், நவநாகரிக வனப்பையும் வெளிப்படுத்துகிறது.

இந்தப் பட்டாடை, கடம்ப மரத்தால் செய்யப்பட்ட அழகிய பெட்டியில் வைக்கப்பட்டு யூகோ கிஷிடாவுக்கு பரிசளிக்கப்பட்டது. கடம்ப மரம் இந்திய கலாச்சாரம், இந்திய மதங்கள் மற்றும் புராணங்களில் மங்கலகரமானதாக கருதப்படுகிறது. கடம்ப மரத்தாலான இந்தப் பெட்டி, கேரளாவின் கைவினைஞர்களால் அழகிய வேலைப்பாடுகளுடன் செய்யப்படும் கைவினைப்பொருளாக உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.