ஏஆர் ரஹ்மானை எதுவும் சொல்லாதீங்க, நாங்க பொறுப்பேற்கிறோம், பணம் திரும்பி வழங்கப்படும் : மன்னிப்பு கேட்ட ஏசிடிசி ஹேமந்த்

இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் கடந்த ஞாயிறு(செப்., 10) அன்று சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு தனியார் திறந்தவெளி அரங்கில் ‛மறக்குமா நெஞ்சம்' என்ற பெயரில் இசை நிகழ்ச்சி நடத்தினார். ஆனால் ரசிகர்களுக்கு மறக்க முடியாத அளவுக்கு ஒரு வலியை தந்த இசை நிகழ்ச்சியாக மாறி விட்டது.

குறிப்பாக அளவுக்கு அதிகமான டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டது, வாகனங்களுக்கு சரியான பார்க்கிங் வசதி செய்யாதது, பார்வையாளர்கள் வந்து செல்வதற்கு நான்கைந்து வாயில்கள் ஏற்பாடு செய்யாதது, பிரதான சாலையில் போக்குவரத்து நெரிசலுக்கு வித்திட்டது, பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்களில் நடந்த அஜாக்கிரதை என அடுக்கி கொண்டே போகலாம்.

நானே பலிகடா
இந்த விவகாரத்தில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளரின் குளறுபடி தான் முழு காரணம் என்றாலும் மக்கள் நம்பி வந்தது ஏ.ஆர்.ரஹ்மான் என்ற இசை மனிதருக்காகத்தான். ஆனால் அவரே ஆரம்பத்தில் நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது என ரீ-டுவீட் போட்டார். பின்னர் சற்றுநேரத்திற்கு பிறகு, ‛‛என்னை சிலர் ஆடு என்கிறார்கள். மக்கள் விழித்துக் கொள்ள இந்த முறை நானே பலியாடு ஆகிறேன். நடந்த குளறுபடிகளுக்கு நானே பொறுப்பேற்கிறேன். அரங்கிற்குள் நுழைய முடியாமல் போனவர்கள், உங்களது டிக்கெட் காப்பியை அனுப்பி வைக்கவும். எங்களது குழுவினர் உடனடியாக பதில் கொடுப்பார்கள்'' என பதிவிட்டார்.

ரஹ்மானுக்கு திரையுலகினர் ஆதரவு
இசை நிகழ்ச்சியால் பாதிக்கப்பட்ட மக்கள் பலரும் ரஹ்மானை குற்றம் சொல்ல ஆரம்பித்தனர். அவர் மோசடி செய்துவிட்டதாக குற்றம் சாட்டினார். ஆனால் இந்த விவகாரத்தில் ரஹ்மானை குற்றம் சொல்லாதீர்கள், அவர் மீது எந்த தவறும் இல்லை. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தான் காரணம் என திரையுலகினர் பலரும் அவருக்கு ஆதரவாக குரல் கொடுக்க துவங்கினர்.

ரஹ்மான் மகள் கதீஜாவோ, ‛‛என் தந்தை மோசடி செய்தது போன்று பேசுவது வருத்தம் அளிக்கிறது. இதற்கு முன் கேரள மழை வெள்ளம், கோவிட் பாதிப்பு உள்ளிட்ட காலங்களில் என் தந்தை இசை நிகழ்ச்சி நடத்தி, அந்த நிதியை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கினார். அவரை பற்றி தவறாக பேசும் முன் இதையெல்லாம் கொஞ்சம் நினைத்து பாருங்கள்'' என பதிவிட்டார்.

நாங்க பொறுப்பேற்கிறோம் – ஏசிடிசி
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியை நடத்தி கொடுத்த ஏசிடிசி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஹேமந்த் வெளியிட்ட வீடியோ பதிவில், ‛‛மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சியை ஆதரித்த ரசிகர்களுக்கும், இசை நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி கொடுத்த ரஹ்மானுக்கும் நன்றி. அதேசமயம் டிக்கெட் வாங்கியும் நிகழ்ச்சியை பார்க்க முடியாமல் போனது போன்ற சில தவிர்க்க முடியாத அசவுகரியங்களும் நடந்துள்ளன. அதற்காக மன்னிப்பு கேட்கிறேன். இதற்கான முழு பொறுப்பையும் ஏசிடிசியான நாங்களே பொறுப்பேற்கிறோம்.

ரஹ்மான் மிகப்பெரிய லெஜெண்ட். நிகழ்ச்சியை அவர் சிறப்பாக நடத்தி கொடுத்தார். இதை உள்ளே அமர்ந்து பார்த்த ரசிகர்களும் ரசித்துள்ளனர். சமூகவலைதளங்களில் ரஹ்மானை தாக்கி நிறைய பேர் கருத்து பதிவிடுகின்றனர். ஆனால் இதற்கும், அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவரை மையப்படுத்தி எந்த ஒரு தாக்குதலும் சமூகவலைதளங்களில் வைக்காதீங்க என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

நாங்கள் நிகழ்ச்சியை முறையாக அனுமதி பெற்று, சரியாக நடத்தினோம். ஆனால் அளவுக்கு அதிகமான கூட்டத்தால் எங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. இதில் நடந்த குளறுபடிகளுக்கு நாங்களே பொறுப்பேற்கிறோம். இதற்காக மீண்டும் மீண்டும் நான் எத்தனை முறை வேண்டுமானாலும் மன்னிப்பு கேட்கிறேன். டிக்கெட் வாங்கி நிகழ்ச்சியை பார்க்க முடியாமல் போனவர்களுக்கு நிச்சயம் நாங்கள் பணத்தை திருப்பி தருவோம். முறைப்படி எல்லாவற்றையும் ஆராய்ந்து பணம் திருப்பி அளிக்கப்படும்.

இவ்வாறு ஹேமந்த் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.