பெங்களூரு : தமிழகத்துக்கு காவிரி நீர் திறப்பது தொடர்பாக, கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் பெங்களூரில் இன்று சிறப்பு அனைத்துக் கட்சிக் கூட்டம் நடக்கிறது.
தமிழகத்துக்கு அடுத்த 15 நாட்களுக்கு, விநாடிக்கு 5,000 கன அடி தண்ணீர் திறந்துவிடும்படி, டில்லியில் நடந்த காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டத்தில், கர்நாடகாவுக்கு நேற்று உத்தரவிடப்பட்டது.
இதுதொடர்பாக, பெங்களூரில் கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் நேற்று இரவு அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது.
துணை முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் மஹாதேவப்பா, செலுவராயசாமி, நாகேந்திரா, மாநில தலைமைச் செயலர் வந்திதா ஷர்மா, நீர்ப்பாசனத் துறை கூடுதல் தலைமைச் செயலர் ரஜ்னீஷ் கோயல் உட்பட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. தண்ணீர் திறப்பு குறித்து முடிவு செய்ய, பெங்களூரு விதான் சவுதாவில் இன்று நண்பகல் 12:30 மணிக்கு, முதல்வர் சித்தராமையா தலைமையில் சிறப்பு அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
துணை முதல்வர் சிவகுமார், காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளைச் சேர்ந்த அமைச்சர்கள், அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த முன்னாள் முதல்வர்கள், முன்னாள் அமைச்சர்கள், அனைத்துக் கட்சி லோக்சபா, ராஜ்யசபா எம்.பி.,க்கள், சட்ட வல்லுனர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement