இந்தியாவில், 1951 முதல் 1967 வரை மக்களவை, மாநிலச் சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடைபெற்றன. இருப்பினும், சில மாநிலச் சட்டசபைகள் முன்கூட்டியே கலைக்கப்பட்டதாலும், சில நேரங்களில் மக்களவை முன்கூட்டியே கலைக்கப்பட்டதாலும், மக்களவை மற்றும் சட்டசபைக்குத் தனித்தனியே என தேர்தல்கள் மாறின. 1971-ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி பிளவுபட்டதைத் தொடர்ந்து தேர்தல்களின் காலமும் மாறியது. அதன் பின்னர் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ குறித்து இந்திய சட்ட ஆணையம், நிதி ஆயோக் மற்றும் நாடாளுமன்ற நிலைக்குழு போன்ற அமைப்புகள் ஏற்கெனவே ஆய்வுசெய்திருக்கின்றன. அதன்படி 1999-ஆம் ஆண்டு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த, சட்ட கமிஷன் பரிந்துரைத்தது. ஆனால், அதன் பிறகு அதற்கான எந்த முன்னெடுப்பையும் எடுக்கவில்லை.
இதனையடுத்து 2014-ஆம் ஆண்டு பாஜக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, மீண்டும் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ குறித்த விவாதத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. அதன் அடிப்படையில் 2018-ம் ஆண்டு சட்ட ஆணையம் முழுத் தயாரிப்புக்கு பிறகு, ‘பிரிவுகள் 83, 85, 172, 174, 356 ஆகிய ஐந்து அரசியலமைப்புத் திருத்தங்கள் செய்ய வேண்டும்’ என்று கூறியதோடு, ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடத்தப் பரிந்துரைத்தது.
இதில், 174-வது பிரிவு மாநிலச் சட்டசபைகளைக் கலைப்பது குறித்தும், முக்கியப் பிரிவு 356 மாநிலங்களில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவது குறித்தும் கூறுகிறது. ஆனால், தற்போதுள்ள அரசியலமைப்புக் கட்டமைப்புக்குள் அது சாத்தியமில்லை என்று குறிப்பிட்டதால், பல்வேறு கேள்விகள் எழுந்தன. 2018-ஆம் ஆண்டு சட்ட ஆணையத்தின் வரைவு அறிக்கையின்படி, கடந்த டிசம்பர் 2022, ஜனவரி 2023-ல் அனைத்துக் கட்சியினர் கருத்துகள், இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள், கல்வியாளர்கள், வல்லுநர்கள் எனப் பலரிடம் கருத்து கேட்ட வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டது. அதேவேளையில் 2022-ஆம் ஆண்டில், நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தத் தயாராக இருப்பதாக தேர்தல் ஆணையமும் கூறியது.

இந்த நிலையில்தான் மீண்டும் இப்போது ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ குறித்தான விவாதம் நாடு முழுவதும் பேசு பொருளாகியிருக்கிறது. அதன்படி, மக்களவை, மாநில சட்டப்பேரவை, நகராட்சிகள் மற்றும் பஞ்சாயத்துகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து ஆய்வு செய்து, விரைவில் பரிந்துரைகளை வழங்க முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் எட்டு பேர் கொண்ட உயர்மட்டக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. இதனை தொடர்ந்து ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ நடத்துவதற்கான சட்ட மசோதாவை ஆளும் பாஜக அரசு வரும் 18 தேதி தொடங்கும் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் தாக்கல் செய்யவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நிலைமை இவ்வாறு இருக்க, ‘ஐந்து மாநிலங்களில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை தள்ளி வைப்பதற்காகவே ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ பிரசாரத்தை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது’ என பிரபல உச்ச நீதிமன்ற வழக்கறிஞரும், சமூக ஆர்வலருமான பிரஷாந்த் பூஷன் தன் விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.
இவ்விவகாரம் தொடர்பாக புவனேஷ்வரில் செய்தியாளர்களிடம் பேசிய பிரஷாந்த் பூஷன், “இந்தியா போன்ற நாடாளுமன்ற ஜனநாயகம் உள்ள நாட்டில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்பதை நடைமுறைப்படுத்த முடியாது” என்பதை தீர்க்கமாக முன் வைக்கிறார். இதற்கான காரணங்களை அடுக்கியவர், “நமது நடைமுறையில் ஓர் அரசு அதன் பெரும்பான்மையை இழக்கும்போது இடையிலேயே கவிழலாம்; அதன்பின்னர் புதிய அரசு பதவி ஏற்கும். இந்நிலையில், ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்பது நடைமுறைப்படுத்தப்படும் போது, இடையில் அரசு கவிழும் போது குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்படும். இது ஜனநாயகத்துக்கு எதிரானது. அதாவது, நாம் ஜனநாயக அமைப்பில் இருந்து குடியரசுத் தலைவர் ஆட்சி முறைக்கு மாறுகிறோம். இது நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு முற்றிலும் எதிரானது” என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், “இதுகுறித்து இந்த அரசு தெளிவாக அறிந்து வைத்திருக்கிறது. குடியரசுத் தலைவர் ஆட்சி முறைக்கு பல்வேறு அரசியலமைப்பு சட்டத் திருத்தம் அவசியம் என்பதையும் அவர்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். மாநிலங்களவையில் இந்த அரசுக்கு பெரும்பான்மை இல்லை. அரசுக்கு இந்த உண்மைகள் எல்லாம் தெரியும் என்றாலும், இந்த ஆண்டு இறுதியில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல்களைத் தள்ளிப்போடவே அரசு இந்த ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ பலூனை ஊதிப் பறக்க விடுகிறது. இந்த ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் பாஜக தோல்வியடைந்து விடும் என்ற பயம் அவர்களுக்கு வந்து விட்டது. அதனால் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற பெயரில் அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் வரை ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களை ஒத்திப்போட முயல்கிறார்கள். அந்த மாநிலங்களில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்படும்” என்று தன் கருத்தை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அரசியல் பார்வையாளர்கள் சிலர், “வரவிருக்கும் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்துக்கு முன்னதாகவே, மத்திய அரசால் நியமிக்கப்பட்ட குழு தனது அறிக்கையை சமர்பிக்குமா, இந்த கூட்டத்திலே மசோதா கொண்டு வரப்படுமா என என்ற விஷயங்கள் குறித்து தெளிவாக மத்திய அரசு எதுவும் சொல்லவில்லை. மேலும் ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டு வருவதன் மூலம், ஒரு மாநில அரசு கலைக்கப்பட்டால், குடியரசு தலைவர் ஆட்சி வருவதற்கே வாய்ப்புகள் அதிகள்.

இதை தான் எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்க்கிறார்கள். அப்படி இருக்கும் போது, ஒரே நாடு ஒரே தேர்தலை அமல்படுத்தும் முன்பே, டிசம்பர் மாதம் தேர்தல் நடக்க இருக்கும் 5 மாநிலங்களில் ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வருவது தேசிய அளவில் பாஜக மீது அதிருப்தியை கொண்டு வரவும் வாய்ப்பு உள்ளது. அப்படியான சூழகில் மக்களவை தேர்தலை முன்கூட்டியே சந்திக்க பாஜக திட்டமிடதான் வாய்ப்புகள் அதிகள் இருக்கிறது.” என்கிறார்கள். என்ன தான் நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY