வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: கனடாவில் இருக்கும் இந்தியர்கள் மற்றும் இந்திய மாணவர்கள் எப்போதும் மிகுந்த கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் எச்சரித்து உள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சமீப நாட்களாக இந்தியாவிற்கு எதிரான செயல்கள், அரசியல்ரீதியிலான பிரிவினை குற்றங்கள், கிரிமினல் வன்முறை ஆகியன கனடாவில் அதிகரித்து வருகிறது. இதனால், கனடாவிற்கு செல்லும் மற்றும் செல்ல உள்ள இந்தியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
இந்தியாவிற்கு எதிரான திட்டங்களை எதிர்த்த இந்திய தூதரக அதிகாரிகள் மற்றும் இந்திய சமுதாயத்தினருக்கு சமீபத்தில் மிரட்டல் விடுக்கப்பட்டது. எனவே, கனடாவில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்த இடங்கள் மற்றும் அச்சுறுத்தல் மிகுந்த இடங்களுக்கு இந்தியர்கள் செல்வதை தவிர்க்க வேண்டும். கனடாவில் வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் தொடர்பாக நமது தூதரக அதிகாரிகள், அந்நாட்டு அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பார்கள்.
கனடாவில் நிலவும் மோசமான பாதுகாப்பு சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, அங்கு இருக்கும் மாணவர்கள் எப்போதும் மிகுந்த எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் இருக்க வேண்டும்.
இந்தியர்கள் மற்றும் மாணவர்கள், ஒட்டாவாவில் உள்ள இந்திய தூதரகத்திலும் அல்லது டொரான்டோ மற்றும் வான்கூவர் நகரங்களில் உள்ள தூதரக அலுவலகங்களிலும் அல்லது madad.gov.in என்ற இணையதளத்திலும் தங்களை பற்றிய விவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு செய்வதன் மூலம், அவசர காலங்கள் அல்லது தேவையில்லாத சம்பவங்கள் நிகழும் போது, தூதரக அதிகாரிகள் உங்களை தொடர்பு கொள்வதற்கு ஏதுவாக இருக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement