
சிங்கம் அகெய்ன் படப்பிடிப்பை தொடங்கிய ரோஹித் ஷெட்டி
தமிழில் ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான சிங்கம் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதனை தொடர்ந்து அந்தப்படம் ஹிந்தியில் அஜய் தேவ்கன் நடிப்பில் சிங்கம் என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு அங்கேயும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தை பிரபல இயக்குனர் ரோஹித் ஷெட்டி இயக்கி இருந்தார். அதைத்தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமாக சிங்கம் ரிட்டன்ஸ் என்கிற படத்தையும், அஜய் தேவ்கனை வைத்து இயக்கினார் ரோஹித் ஷெட்டி. ஆனால் இங்கே தமிழில் வெளியான சிங்கம் 2 படத்தின் ரீமேக்காக அல்லாமல் புதிய கதையை வைத்து அந்தப்படத்தை இயக்கினார்.
இந்த நிலையில் தற்போது மீண்டும் சிங்கம் அகெய்ன் என்கிற பெயரில் இதன் மூன்றாம் பாகத்தை இயக்குகிறார் ரோஹித் ஷெட்டி. இந்தப் படத்தின் துவக்க விழா பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இந்த படத்திலும் அஜய் தேவ்கனே கதாநாயகனாக நடிக்கிறார். ரோஹித் ஷெட்டியின் ஆஸ்தான நடிகரான ரன்வீர் சிங்கும் இந்த பூஜையில் கலந்து கொண்டிருப்பதை பார்க்கும்போது இவரும் இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறாரோ என்றும் ஒரு யூகத்தை கிளப்பி உள்ளது.
இந்த படம் பற்றி ரோஹித் ஷெட்டி கூறும்போது, “பத்து வருடங்களுக்கு முன்பு சிங்கம் படத்தை எடுத்தபோது அதைத் தொடர்ந்து சிங்கம் ரிட்டன்ஸ், சிம்பா, சூர்யவன்சி என தொடர்ந்து போலீஸ் படங்களாகவே எடுப்பேன் என நினைத்துக்கூட பார்க்கவில்லை. தற்போது அதன் தொடர்ச்சியாக இந்த சிங்கம் அகெய்ன் படம் துவங்கியுள்ளது” என்று கூறியுள்ளார்.