தமிழகத்திற்கு திறந்து விடுவதற்கு தண்ணீர் இல்லை என்பதால், இரு மாநில முதல்வர்களையும் அழைத்து பேசும்படி பிரதமரிடம் வலியுறுத்த, கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில், டில்லியில் நேற்று நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
தமிழகத்துக்கு, 5,000 கன அடி தண்ணீரைத் திறந்து விடும்படி, காவிரி மேலாண்மை ஆணையம் மூன்று நாட்களுக்கு முன், கர்நாடகாவுக்கு உத்தரவிட்டிருந்தது.
இது தொடர்பாக ஆலோசிக்க, கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில், நேற்று மாநிலத்தின் அனைத்துக் கட்சி எம்.பி.,க்களின் ஆலோசனை கூட்டம் டில்லியில் நடந்தது.
நட்சத்திர ஹோட்டலில் நடந்த கூட்டத்தில், துணை முதல்வர் சிவகுமார், கர்நாடகாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள், அனைத்துக் கட்சி எம்.பி.,க்கள், சட்ட வல்லுனர்கள், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளைச் சேர்ந்த மாநில அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்றனர்.
இதில், முதல்வர் சித்தராமையா பேசியதாவது:
இரு மாநில முதல்வர்களையும் அழைத்து பிரச்னையை தீர்த்து வைக்கும் அதிகாரம் பிரதமருக்கு உள்ளது. எனவே, அவர் உடனடியாக தலையிட்டு பிரச்னையைத் தீர்க்க வேண்டும்.
கர்நாடகாவில், 195 தாலுகாக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டவை என்று அடையாளம் கண்டுள்ளோம். கடந்த 123 ஆண்டுகளிலேயே இந்தாண்டு ஆகஸ்ட் மாதம் தான் மிகக் குறைந்த அளவு மழை பெய்தது. வழக்கத்தை விட குறைவான மழை பெய்ததே, பாதிப்பு அதிகரிக்க காரணம். நெருக்கடி காலங்களில் பின்பற்றப்பட வேண்டிய விதிமுறை, வகுக்கப்படவில்லை.
கர்நாடக மக்களுக்கு குடிநீர் இல்லை, பயிரைக் காக்க தண்ணீர் இல்லை. மிகுந்த சிரமத்தில் உள்ளோம். இதுகுறித்து காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்று குழுவிடம், ஏற்கனவே விளக்கப்பட்டுஉள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
மேலும், தமிழகத்துக்கு, 5,000 கன அடி நீர் வழங்குமாறு, காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்குத் தடை கோரி, உச்ச நீதிமன்றத்தில் கர்நாடகா சார்பில் நேற்று மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
– நமது நிருபர் –
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்