நிகழ்ச்சி தொகுப்பாளருக்கு மாலை அணிவித்த கூல் சுரேஷிற்கு கடும் எதிர்ப்பு : மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியீடு

தமிழ் சினிமாவில் அவ்வப்போது சில படங்களில் ஒரு காட்சியில் வந்து நடித்துவிட்டுச் செல்பவர் கூல் சுரேஷ். சிம்பு நடித்து வெளிவந்த 'வெந்து தணிந்தது காடு' படம் வெளிவருவதற்கு முன்பாக “வெந்து தணிந்தது காடு, சிம்புவுக்கு வணக்கத்தைப் போடு” எனப் பேசி யு டியுப் சேனல்களில் அடிக்கடி பேட்டி எடுக்கும் அளவிற்கு வந்தார்.

சில சிறிய பட்ஜெட் படத் தயாரிப்பாளர்கள் அவர்களது படங்களை எப்படியாவது பிரபலப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்களின் பட நிகழ்ச்சிகளுக்கு கூல் சுரேஷை அழைக்க ஆரம்பித்தார்கள். அவரும் கோமாளி போல அந்தந்த படத்திற்கு ஏற்ப டிரஸ் செய்து கொண்டு வந்து எதையாவது உளறி வைப்பார்.

நேற்று மன்சூரலிகான் நடித்துள்ள 'சரக்கு' என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. அப்போது திடீரென நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய பெண் தொகுப்பாளருக்கு மாலை அணிவித்தார். அவரது அந்த செயலால் தொகுப்பாளர் அதிர்ச்சியடைந்தார். மாலையை உடனே கழற்றி கீழே எறிந்தார். நிகழ்ச்சி முடியும் வரை அவர் பதட்டத்துடனேயே இருந்தார்.

பின்னர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த பத்திரிகையாளர்கள் கூல் சுரேஷ் மன்னிப்பு கேட்க வேண்டுமென்று கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். வேறு வழியின்று கூல் சுரேஷ் மன்னிப்பு கேட்டார்.

இவரைப் போன்றவர்களை நிகழ்ச்சிகளுக்கு அழைப்பதை தயாரிப்பாளர்கள் தவிர்க்க வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் ரோபோ சங்கர் ஆபாசமாகப் பேசியதும் அதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

மன்னிப்பு கேட்ட கூல் சுரேஷ்
இந்நிலையில் நடந்த நிகழ்வுக்கு மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார் கூல் சுரேஷ். அதில், ‛‛சரக்கு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சில அசம்பாவிதங்கள் நடந்துவிட்டன. அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பெண்ணிற்கு மாலை அணிவித்துவிட்டேன். நான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி கலகலப்பாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அப்படி நகைச்சுவையாக செய்த விஷயம் தான் அது. விளையாட்டாக செய்தது இப்போது வினையமாகிவிட்டது. எனக்கே தர்ம சங்கடம் ஆகிவிட்டது. அந்த பெண்ணின் பெயர் தெரியவில்லை. அவரிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கிறேன். அதேப்போல் பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களிடமும் மன்னிப்பு கேட்கிறேன்.

இந்த சம்பவத்திற்கும், மன்சூர் அலிகானுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. முழுக்க முழுக்க நான் தான் காரணம். தவறு செய்தவன் நான் தான் ஒப்புக் கொள்கிறேன். அந்த நிகழ்ச்சி துவங்குவதற்கு முன் மேள-தாளம் அடிக்கும்போது அந்த பெண்ணும் நானும் ஒன்றாக நடனம் ஆடினோம். இதனால் அந்த பெண் இதை ஜோவியலாக எடுத்துக் கொள்வார் என காமெடிக்காக மாலை போட்டேன். ஆனால் அவர் அதற்கு ரியாக்ட் பண்ணிவிட்டார். கூல் சுரேஷ் என்றால் விளையாட்டு தனமாக செய்வார், இதை ஜாலியாக எடுத்து கொள்வீர்கள் என்று தான் அப்படி செய்தேன். ஆனால் ஒரு பெண்ணுக்கு இப்படி ஒரு தர்ம சங்கடமான நிலையை ஏற்படுத்தி தரும் என நினைக்கவில்லை. எது நடந்து இருந்தாலும் நான் மீண்டும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கிறேன்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.