புதுச்சேரி அரசு மீதான தணிக்கை அறிக்கையில் பகீர்: ரூ.28 கோடி முறைகேடு அம்பலம்| Audit report on Puducherry Govt: Bhagir: Rs 28 crore fraud exposed

புதுச்சேரி: புதுச்சேரி அரசின் பல்வேறு துறைகளில் நடந்த 322 பணிகளில், ரூ.27.98 கோடிக்கு அரசு பணம் முறைகேடு, இழப்பு, களவு மற்றும் கையாடல் செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி அரசின் கடந்த 2021-22 நிதி ஆண்டுக்கான இந்திய தணிக்கை துறைத்தலைவரின் நிதித்துறை மீதான தணிக்கை அறிக்கை சட்டசபையில் நேற்று சமர்பிக்கப்பட்டது. தொடர்ந்து புதுச்சேரி அரசின் தணிக்கை அறிக்கையை தமிழ்நாடு- புதுச்சேரி முதன்மை கணக்காய்வு தலைவர் ஆனந்த் வெளியிட்டார்.

அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:

அரசு கணக்கு மீதான கண்ணோட்டம்

புதுச்சேரியின் 2021-22ம் ஆண்டின் வருவாய் வரவினங்கள் முந்தைய ஆண்டான 7,859 கோடியை விட 1,969 கோடியாக அதிகரித்தது. இருப்பினும், வருவாய் செலவினம் ரூ.1,488 கோடி அதிகரித்தது. இதனால், ரூ. 889 கோடி வருவாய் பற்றாக்குறையில் முடிந்தது.இதேபோல் புதுச்சேரியில் 2020–21ல் ரூ. 240 கோடியாக இருந்த மூலதன செலவினம் 2021–22ல் ரூ. 163 கோடியாக குறைந்தது.
அதனால் நிதிப்பற்றாக்குறை ரூ. 1615 கோடியில் இருந்து ரூ. 1052 கோடியாக குறைந்தது.

நிதி ஆதாரங்கள்

2021–22ல் வருவாய் வரவினங்கள் முந்தைய ஆண்டை விட ரூ. 1969 கோடியாக 33.43 சதவீதம் அதிகரித்தது. ரூ.1067.90 கோடி வருவாய் நிலுவையில், 674.92 கோடி ஐந்தாண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ளது. 2021-22 மத்திய அரசிடம் பெறப்பட்ட ரூ.2,439 கோடி உதவி மானியங்களின் பங்களிப்பு வருவாய் வரவினத்தில் 31.03 சதவீதமாக இருந்தது.

114.31 கோடி முடக்கம்

கடந்த 2021-22 காலக்கட்டத்தில் மூலதன செலவினம் 163 கோடியாகும். இது மொத்த செலவினத்தில் 1.83 சதவீதமாக மட்டுமே இருந்தது. பொதுப்பணித்துறை, மின்துறைகளில் 34 முடிவடையாத திட்டங்களால் ரூ. 114.31 கோடி முடக்கப்பட்டுள்ளது.

latest tamil news

மாநில கடன் எவ்வளவு

கடந்த 2017–18ல் ரூ. 8799 கோடியாக இருந்த கடன்கள் 2021–22ல் ரூ. 12,593 கோடியாக அதிகரித்துள்ளது.

மறு நிதி ஒதுக்கம்

ரூ. 10 லட்சத்துக்கு மேல் செய்யப்பட்ட மறு நிதி ஒதுக்கத்தில் 70 பணிகளில் ரூ. 45.33 கோடி முழுவதும் தேவையற்றதானது. இதில் 15 பணிகளில் எந்த செலவும் செய்யப்படவில்லை.

பயன்பாட்டு சான்றிதழ்

அரசில் நடந்த 769 பணிகளில் ரூ. 502.16 கோடிக்கான பயன்பாட்டு சான்றிதழ்கள் நிலுவையில் இருந்தன. இதில் ரூ. 37.91 கோடிக்கான 199 பயன்பாட்டு சான்றிதழ்கள் 9 ஆண்டு காலத்துக்கும் மேலாக நிலுவையில் உள்ளன.

கணக்கு தரப்படவில்லை

அதிகாரிகளால் பெறப்பட்ட ரூ. 130.7 கோடிக்கான 1100 தற்காலிக முன்பணங்களுக்கான கணக்குகள்தரப்படவில்லை. இதில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக ரூ. 17.65 கோடிக்கான 296 தற்காலிக முன்பணங்களின் கணக்கு தரப்படவில்லை.
கணக்கு தணிக்கைக்கு 70ல் 61 அமைப்புகள், குழுமங்கள் கணக்கை தரவில்லை. ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக 17 அமைப்புகள், குழுமங்கள் கணக்குகளை தரவில்லை. இது தொடர்பாக புகாரும் அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.27.98 கோடி முறைகேடு

பல்வேறு அரசு துறைகளில் 322 பணிகளில் ரூ. 27.98 கோடிக்கு அரசு பணம், முறைகேடு, இழப்பு, களவு மற்றும் கையாடல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டுள்ளது.

லாபம்-நஷ்டம்

புதுச்சேரியில் ஐந்து பொதுத்துறை நிறுவனங்கள் ரூ. 38.48 கோடி லாபத்தையும், 7 பொதுத்துறை நிறுவனங்கள் ரூ. 49.87 கோடி நஷ்டத்தையும் சந்தித்தன. புதுச்சேரியில் 12 அரசுத்துறை நிறுவனங்களின் கணக்குகள் இறுதி செய்யப்படாமல் நிலுவையில் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
துணை கணக்காய்வு தலைவர் வர்ஷினி அருண், சீனியர் கணக்கு அதிகாரிகள் மெய்யப்பன், மணிமொழி உடனிருந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.