“உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச்சடங்குகள் அரசு மரியாதையுடன் நடத்தப்படும்!" – முதல்வர் ஸ்டாலின்

மருத்துவம் நன்கு வார்ச்சியடைந்துகொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில், மக்களும் சக மனித உயிர்களைக் காப்பாற்றுவதில் விழிப்புணர்வு அடைந்துவருகின்றனர். அதன் ஒருபகுதியாக ஏராளமான குடும்பங்கள், தங்கள் குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் உயிரிழந்தாலும் கூட, பிறருக்குப் பயன்படும் வகையில் இறந்தவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வருகின்றன.

உடல் உறுப்பு தானம்

இதில், இந்திய அளவில் உறுப்பு தான திட்டத்தில் சிறப்பான செயல்பாட்டுக்காகச் சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டுக்கு State Organ and Tissue Transplantation Organization (SOTTO) என்ற விருது கடந்த மாதம் வழங்கப்பட்டது. இந்த நிலையில், இறக்கும் முன் உடல் உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிவித்திருக்கிறார்.

இதுகுறித்து ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “உடல் உறுப்பு தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் அரும்பணியில் நாட்டின் முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு தொடர்ந்து விளங்கி வருகின்றது.

முதல்வர் ஸ்டாலின்

குடும்ப உறுப்பினர்கள் மூளைச்சாவு நிலையை அடைந்த துயரச் சூழலிலும், அவர்களின் உடல் உறுப்புகளைத் தானமாக அளித்திட முன்வரும் குடும்பங்களின் தன்னலமற்ற தியாகங்களால்தான் இந்தச் சாதனை சாத்தியமாகியுள்ளது.

தம் உறுப்புகளை ஈந்து, பல உயிர்களைக் காப்போரின் தியாகத்தினைப் போற்றிடும் வகையில், இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும்” என்று அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்திருக்கிறார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.