நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான `ஜெயிலர்’ திரைப்படம் கிட்டத்தட்ட 600 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்திருக்கிறது. இதனைப் படக்குழுவே அறிவித்திருக்கிறது. `பீஸ்ட்’ படத்துக்குப் பிறகு நெல்சனின் கம்பேக்காகவும், `அண்ணாத்த’ படத்துக்குப் பிறகு ரஜினியின் கம்பேக்காகவும் இது பார்க்கப்படுகிறது.
மலையாள நடிகர் மோகன் லால், கன்னட நடிகர் சிவராஜ் என இருபெரும் நடிகரின் ஓரிரு காட்சிகள்கூட திரையைத் தெறிக்க விடப் பல மொழிகளிலும் பெரும் வரவேற்பையும், வசூலையும் அள்ளிக்குவித்திருக்கிறது. இத்திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தயாரிப்பு நிறுவனம் சார்பில் கலாநிதி மாறன் முதலில் நடிகர் ரஜினிகாந்த்துக்கு ‘BMW X7’ காரைப் பரிசாக வழங்கியிருந்தார்.

இதனையடுத்து இயக்குநர் நெல்சன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத்துக்கு ‘Porsche’ என்ற சொகுசு காரைப் பரிசாக வழங்கியிருக்கிறார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் பலருமே இந்த Porsche கார் குறித்துத் தேடி வருகின்றனர்.
Porsche ஒரு ஜெர்மன் கார் நிறுவனம். நெல்சன் மற்றும் அனிருத்துக்கு வழங்கப்பட்ட மாடல் Porsche Macan ரக கார் எனக் கூறப்படுகிறது. இந்த ரக காரை அந்நிறுவனம் கடந்த 2014-ம் ஆண்டுதான் உற்பத்தி செய்யத் தொடங்கியிருக்கிறது.

இதில் Macan, Macan ஸ்டாண்டர்ட், S, GTS என 3 வேரியன்ட்டுகள் இருக்கின்றன. இதில் Macan S வேரியன்ட் கார்தான் நெல்சன் மற்றும் அனிருத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 4.8 வினாடிகளில் 100 கிமீ வேகத்தையும், 18.9 வினாடிகளில் 200 கிமீ வேகத்தையும் அடையும் இந்த Macan S காரின் எக்ஸ் ஷோரூம் விலையே கிட்டத்தட்ட 1.44 கோடி ரூபாய்.