பாகிஸ்தானில் சிறுபான்மை சமூக பெண்கள் ஆயிரம் பேர் வரை கடத்தல், மதமாற்றம், திருமணம்… கடுமையாக சாடிய இந்தியா

நியூயார்க்,

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பொது சபையின் 78-வது கூட்டத்தொடரின்போது, பாகிஸ்தானின் பிரதமரான (பொறுப்பு) அன்வாரூல் ஹக் காக்கர் பேசும்போது, இந்தியா உள்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் அமைதி மற்றும் ஆக்கப்பூர்வ தொடர்புகளையே விரும்புகிறது.

பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுக்கு இடையே அமைதி ஏற்பட காஷ்மீர் விவகாரம் முக்கியம் என்று பேசினார். ஐ.நா. பொது சபையில் காஷ்மீர் விவகாரங்களை எழுப்பியதற்காக, பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்து உள்ளது.

இதற்கு பதிலளிக்கும் வகையில் ஐ.நா. பொது சபையின் இரண்டாவது குழுவுக்கான இந்தியாவின் முதன்மை செயலாளர் பெடல் கெலாட் கூறும்போது, இந்தியாவின் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதிகளை பாகிஸ்தான் காலி செய்து வெளியேற வேண்டும். எல்லை கடந்த பயங்கரவாதம் நிறுத்தப்பட வேண்டும் என்று கூறினார்.

ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்கள் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகள் என்றும், இந்தியாவின் உள்விவகாரங்களை பற்றி அறிக்கைகளை வெளியிட பாகிஸ்தானுக்கு எந்தவித உரிமையும் கிடையாது என்றும் அவர் வலியுறுத்தி கூறினார்.

அவர் தொடர்ந்து கூறும்போது, உலகின் மிக பெரிய ஜனநாயக நாட்டை நோக்கி கையை நீட்டி சுட்டி காட்டும் முன்பு, தனது சொந்த நாட்டை நன்றாக வைத்திருந்திருக்க வேண்டும் என கெலாட் கூறியுள்ளார்.

இதற்கு எடுத்துக்காட்டாக, கடந்த ஆகஸ்டில் பைசலாபாத் மாவட்டத்தில் பல்வேறு கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் வீடுகள், தீ வைத்து எரிக்கப்பட்டன. சிறுபான்மையினருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட வன்முறைக்கு தெளிவான எடுத்துக்காட்டாக இது உள்ளது என அந்நாட்டுக்கு அவர் நினைவுப்படுத்தினார்.

பாகிஸ்தானில் ஒவ்வோர் ஆண்டும் சிறுபான்மையின சமூகத்தின் ஆயிரம் பெண்கள் வரை கடத்தப்பட்டு, கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்யப்பட்டு, திருமணம் செய்து வைக்கப்படுகின்றனர். இதனை அந்நாட்டின் மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது என்று அதனை அடிப்படையாக கொண்டு கெலாட் குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.