புதுடெல்லி: மக்களவைத் தேர்தலில் இண்டியா கூட்டணியை வெற்றி பெறச் செய்தால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நேற்று கூறியதாவது: மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றத்தை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது. இந்த மசோதாவைக் கொண்டு வர முதலில் முயற்சித்தது காங்கிரஸ் கட்சிதான். தற்போது இந்த மசோதாவானது, சாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கையை திசைதிருப்பும் முயற்சியாக இருக்கிறது. அதில் 2 விஷயங்களை நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். ஒன்று மகளிர் இடஒதுக்கீடு சட்டம் அமலாவதற்கு முன்னதாக ஒபிசி இடஒதுக்கீட்டை உறுதி செய்ய ஏதுவாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியிருக்க வேண்டும். இரண்டாவது தொகுதி மறுவரையறையையும் செய்து முடித்திருக்க வேண்டும். ஆனால் இவை இரண்டுமே செய்யப்படவில்லை.
இப்போது இவற்றுக்கு எல்லாம் காத்திருக்காமல் பிரதமர் நரேந்திர மோடி மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வராலாம். சொல்லப்போனால், இடஒதுக்கீட்டு சட்டத்தை இன்றைக்கே கூட அமல்படுத்தலாம். அது ஒன்றும் அவ்வளவு சிக்கலான விஷயம் இல்லை. ஆனால், மத்திய அரசு அதைச் செய்யுமா என்று தெரியவில்லை. ஏன் இந்தச் சட்டம் நிறைவேற்றப்படாமலும்கூட போகலாம். மக்களின் முன்னால் இந்தச் சட்டத்தை இப்போது கொண்டு வருவதாகக் காட்டிவிட்டு பின்னர் 10 ஆண்டுகளுக்கு பிறகு கூட இது நிறைவேற்றப்படலாம்.
வரும் மக்களவைத் தேர்தலில் இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், நாங்கள் நிச்சயமாக சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம். பிரதமர் நரேந்திர மோடி தன்னை எப்போதும் ஓபிசி தலைவர் என்று அடையாளப்படுத்திக் கொள்கிறார். ஆனால் ஓபிசி, ஆதிவாசிகள், பட்டியலினத்தைச் சேர்ந்த அதிகாரிகள் உயர்மட்டத்தில் எத்தனை பேர் என்று விரல்விட்டு எண்ணினால் மூவர் மட்டுமே உள்ளனர். பாஜக எம்.பி.க்கள் வெறும் சிலைகள்தான். அவர்களுக்கென்று சட்டம் இயற்றுதலில் தனிப்பட்ட அதிகாரம் ஏதும் இல்லை.
சட்டம் இயற்றுதலில் எத்தனை எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் உள்ளனர் என்று பாஜகவினரைப் பார்த்துக் கேட்டால் தெரிந்துகொள்ளலாம். பாஜக எம்எல்ஏக்கள், எம்.பி.க்களுக்கு போதுமான அதிகாரம் இல்லை என்பதுதான் உண்மை. இவ்வாறு அவர் கூறினார்.