வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஒட்டாவா: இந்தியா – கனடா உறவில் விரிசல் ஏற்பட்ட நிலையில், ‘இந்தியா உடனான உறவு எங்களுக்கு முக்கியமானது’ என அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் பில் பிளேயர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தடை செய்யப்பட்ட ‛காலிஸ்தான் டைகர் போர்ஸ்’ என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவரும், இந்தியாவில் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டு, 10 லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டவருமான ஹர்தீப் சிங் நிஜ்ஜார்(45) கடந்த ஜூன் மாதம் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த விவகாரத்தில் இந்தியா மீது கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பழி சுமத்தினார். இதனால் இந்தியா – கனடா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது.
இதற்கிடையே குளோபல் நியூஸ் செய்தி நிறுவனத்திற்கு கனடா பாதுகாப்பு அமைச்சர் பில் பிளேயர் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: இந்தியாவுடனான எங்கள் உறவு இப்போது ஒரு சவாலாக இருக்கிறது என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். இந்தியா உடனான உறவு எங்களுக்கு முக்கியமானது. ஆனால் அதே நேரத்தில், சட்டத்தைப் பாதுகாத்து எங்கள் குடிமக்களைப் பாதுகாக்கும் பொறுப்பு எங்களிடம் இருக்கிறது.
நாங்கள் ஒரு முழுமையான விசாரணையை நடத்தி உண்மையைப் பெறுவதற்கும் எங்களுக்குப் பொறுப்பு உள்ளது. இப்போது விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. இதில் உண்மையை நாங்கள் நிச்சயம் கண்டறிவோம். குற்றச்சாட்டுகள் உண்மை என நிரூபிக்கப்பட்டால் அது பெரிய பிரச்னை தான். ஏனென்றால் கனடா மண்ணில் கனடா குடிமகன் ஒருவரைக் கொல்வது என்பது எங்கள் இறையாண்மையை மீறும் செயலாகும். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement