'கமெண்ட்' ஆப் செய்து ஏஆர் ரஹ்மான் டுவீட்

ஏஆர் ரஹ்மானின் 'மறக்குமா நெஞ்சம்' என்ற இசை நிகழ்ச்சி இரண்டு வாரங்களுக்கு முன்பு செப்டம்பர் 10ம் தேதி சென்னையில் நடைபெற்றது. அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட மிக அதிகமான டிக்கெட்டுகள் விற்கப்பட்டதால் நிகழ்ச்சியில் கடும் நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு பொதுமக்கள் மட்டுமல்ல, தமிழக முதல்வர் கூட அந்த நெரிசலில் சிக்கிக் கொண்டார்.

இதையடுத்து அன்றிரவு முதலே சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி பற்றி கடுமையாக விமர்சித்து பதிவிட ஆரம்பித்தனர். முதலில் அதை கண்டு கொள்ளாத ரஹ்மான் நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது போன்ற வீடியோவைப் பதிவிட்டார். அதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. அதைத் தொடர்ந்து எங்களது குழுவினருக்கு உங்கள் குறைகளையும், டிக்கெட் காப்பியையும் அனுப்பி வையுங்கள், ஆவண செய்வார்கள் என பதிவிட்டார். அதையடுத்து டிக்கெட் கட்டணங்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகிறது.

காவல் துறையும் அது குறித்து விசாரணை நடத்தி நிகழ்ச்சியை நடத்திய நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக சமூக வலைத்தளங்கள் பக்கம் வராத ரஹ்மான் நேற்று திடீரென சென்னையில் நடந்த 'மறக்குமா நெஞ்சம்' நிகழ்ச்சியின் ஹைலைட்ஸ் என வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார். ஆனால், அந்தப் பதிவுகளின் 'கமெண்ட்' பகுதியை பிளாக் செய்துள்ளார். அதனால், யாரும் கமெண்ட் பதிவிட முடியாது.

ரசிகர்கள் மீதும், விமர்சனங்கள் மீதும் அவ்வளவு பயம் உள்ள ரஹ்மான் எதற்காக 'கமெண்ட்' பகுதியை பிளாக் செய்ய வேண்டும் என ரசிகர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.