பீகாரின் பாட்னாவில், பட்டியலினப் பெண் ஒருவர், வாங்கிய கடனை திருப்பிக் கொடுத்த பிறகும், கடன் கொடுத்தவர்களால் நிர்வாணமாக்கப்பட்டு, தாக்கப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தச் சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்ட தகவலின்படி, பாதிக்கப்பட்ட பட்டியலினப் பெண், சில மாதங்களுக்கு முன்பு பிரமோத் சிங் என்பவரிடம் வட்டிக்கு ரூ.1,500 பணம் வாங்கியதாகவும், பின்னர் வட்டியுடன் திருப்பிக் கொடுத்திவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும், பிரமோத் சிங் அந்தப் பெண்ணிடம் மேலும் பணம் கேட்டு வந்திருக்கிறார். ஆனால், அந்தப் பெண் பணம் தர மறுத்திருக்கிறார். அதையடுத்து பிரமோத் சிங், “பணத்தை தரவில்லையென்றால் நிர்வாணமாக்கப்பட்டு, ஊர்வலமாக இழுத்துச் செல்லப்படுவாய்!” என்று அந்தப் பெண்ணை மிரட்டியிருக்கிறார். இதனால், பிரமோத் சிங் தன்னை மிரட்டுவதாக போலீஸில் அந்தப் பெண் புகாரளித்திருக்கிறார்.
இருப்பினும், போலீஸ் தரப்பு இதனைப் பெரிதாக கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த சனிக்கிழமையன்று பிரமோத் சிங் தன்னுடைய மகன் அன்ஷு உட்பட ஐந்து பேருடன், இரவு 10 மணியளவில் அந்தப் பெண்ணின் வீட்டுக்குச் சென்று, அவரை வலுக்கட்டாயமாக தன்னுடைய வீட்டுக்கு அழைத்து வந்திருக்கிறார். அதோடு, அந்தப் பெண்ணை நிர்வாணமாக்கி, கொடூரமாகத் தாக்கி, அன்ஷுவிடம் அவர்மீது சிறுநீர் கழிக்குமாறு கூறி, கொடுமைப்படுத்தியிருக்கிறார்.

பின்னர் ஒருவழியாக அந்தப் பெண் அங்கிருந்து தப்பித்து, தனது வீட்டுக்கு வந்துவிட்டார். பிரமோத் சிங், அவரின் கூட்டாளிகள் தாக்கியதில், தலையில் பலத்தக் காயமடைந்த அந்தப் பெண், தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தவே, பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரும், பட்டியலினச் சமூகத்தினரும், பிரேம் சிங், அவர் மகன் உள்ளிட்டோர்மீது உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துவருகின்றனர். பிரேம் சிங்கும் அவரின் மகனும் இந்தச் சம்பவத்துக்குப் பிறகு தலைமறைவாகிவிட்டனர். தற்போது போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.