அமிதாப் பச்சன் விளம்பரத்திற்கு வியாபாரிகள் எதிர்ப்பு

பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் திரைப்படங்களில் நடித்து சம்பாதிப்பதை விட விளம்பரங்களில் நடித்து சம்பாதிப்பதுதான் அதிகம். காரணம் இவர் விளம்பர படங்கள் ஹிந்தி பேசும் பல மாநிலங்களில் வியாபார நிறுவனங்களுக்கு நல்ல பலனை கொடுக்கும். அமிதாப் நடித்த நூடுல்ஸ் விளம்பரம், ரம்மி விளம்பரம் சர்ச்சையை ஏற்படுத்தியது, இதற்காக அமிதாப் மன்னிப்பும் கேட்டார். இந்த நிலையில் தற்போது அமிதாப் நடித்துள்ள விளம்பரம் ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல ஆன் லைன் விற்பனை நிறுவனம் தயாரித்துள்ள ஒரு செல்போன் விளம்பரத்தில் அமிதாப் பச்சன், “இந்த போன் கடைகளில் கிடைக்காது” என்று வசனம் பேசியுள்ளார். இதனால் எந்த பொருளும் இனி கடையில் கிடைக்காது என்கிற பொருள்படும்படியாக அந்த விமர்சனம் உள்ளது என்று கூறி அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டடமைப்பு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் “குறிப்பிட்ட அந்த விளம்பரத்தில் மொபைல்களின் தரம், விற்பனைக்காக அமிதாப் பச்சன் பேசி நடிக்கிறார். அப்போது, இந்த மொபைல் போன்கள் உங்களுக்கு கடைகளில் கிடைக்காது என்கிறார். சர்ச்சைக்குரிய இதுபோன்ற வசனத்தை வர்த்தகர்களின் கூட்டமைப்பு கடுமையாக எதிர்த்து உள்ளது. இந்த தவறான சித்தரிப்பு உள்ளூர் சிறிய கடைகளை கடுமையாக பாதிக்கிறது. ஏற்கனவே ஆன்லைன் வர்த்தகத்தால் சிறு தொழில்கள் பாதித்துள்ள நிலையில் அமிதாப் பச்சன் இதுபோன்ற விளம்பரத்தில் நடிப்பதால், எங்களுக்கு மேலும் நஷ்டம் ஏற்படும். இந்த விளம்பரத்தை தடை செய்ய வேண்டும். அமிதாப் பச்சன் மற்றும் ஆன்லைன் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

“சிறு வியாபாரிகளை காயப்படுத்தும் எண்ணம் துளியளவும் எனக்கு இல்லை. இதற்காக நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அமிதாப்பச்சன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.