கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள், கருத்தரங்கங்கள், போட்டிகள், விழாக்கள், உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை திமுக.
இந்நிலையில் கலைஞருடனான நினைவுகள், அவரின் அரசியல்-சினிமா-இலக்கிய பங்களிப்புக் குறித்து சினிமா நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் எனப் பலரும் உரையாற்றி, கட்டுரைகள் எழுதி வருகின்றனர். அவ்வகையில் தமிழ் சினிமாவின் முன்னனி நட்சத்திரமான ரஜினிகாந்த், முரசொலியில், ‘கலைஞர் இதயத்தில் எனக்கென்று தனி இடம் இருந்தது!’ என்ற தலைப்பில் கட்டுரை எழுதியுள்ளது பேசுபொருளாகி வருகிறது.
அதில், கலைஞரின் வசனத்தில் படம் நடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டது குறித்து தனக்கே பாணியில் சுவாரஸ்யமாகக் குறிப்பிட்டுள்ளார் ரஜினி.

அந்தக் கட்டுரையில், “நான் 1980–ல் ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தேன்; அந்தப் படத்திற்கு கலைஞர் அவர்கள் வசனம் எழுத ஒப்புக் கொண்டார்; எளிமையான தமிழ் வசனங்களை பேசி நடிப்பதற்கே திண்டாடிக் கொண்டிருக்கும் நான் கலைஞரின் வசனங்களைப் பேசி நடிப்பதா ? நடக்காத காரியம்… இதற்கு நான் கர்நாடகாவிற்கே ஓடிப்போய் மறுபடியும் பேருந்தில் டிக்கெட் விற்க ஆரம்பித்து விடலாம். ‘தயாரிப்பாளரிடம் முடியவே முடியாது’ என்று கூறினேன்’.
“சார் உங்கள் வசனங்களை நான் பேச முடியாது. எளிமையான தமிழை பேசவே நான் சிரமப்படுகிறேன். அப்படி இருக்கும் போது உங்கள் வசனங்களை எப்படி நான் பேசுவது? என்னால் முடியாது. தவறாக நினைக்க வேண்டாம்’ என்று கலைஞரிடம் கூறினேன்” என்றார்.
மேலும், அதற்காகத் தான் இன்னும் வருத்தப்படுவதாகக் கூறும் ரஜினி, “தயாரிப்பாளரின் மனதையும்துன்புறுத்தாமல், ‘காலம் மிகவும் கம்மியாக இருக்கின்றது. அடுத்த படத்தில் பார்த்துக் கொள்ளலாம்’ என்று தயாரிப்பளரிடன் கூறிவிட்டார் கலைஞர்;
அவருடைய செய்கையால் எனக்கு அவர் மீது இருந்த மதிப்பும், மரியாதையும் பல மடங்கு உயர்ந்தது. ஆனாலும் அவருடைய வசனங்களை பேசி நடித்திருக்கலாமோ? தவறு செய்து விட்டோமோ? என்ற ஒரு குற்ற உணர்ச்சி இன்றும் எனக்குள் இருந்து கொண்டே இருக்கின்றது” என்று நெகிழ்ச்சியாக கலைஞருடனான நினைவு குறித்துப் பகிர்ந்திருக்கிறார்.