எதிர்வரும் 2 வருடங்களுக்குள் சூரிய சக்தியினால் 3000 மெகா வோட்ஸ் மின்சாரம்

எதிர்வரும் 2 வருடங்களுக்குள் 3000 மெகா வோட்ஸ் சூரிய சக்தி மற்றும்; 1000 மெகா வோட்ஸ் சுழல் சக்தியினால் மின்சாரத்தை உற்பத்தி செய்தல் அரசாங்கத்தின் இலக்கு என்றும் அதற்காக 70 சதவீதம் புதுப்பிக்கத்தக்க மின்சக்தியை வழங்கும் இலக்கை அடைய முடியும் என மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன ஜயசேகர (04) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

மின் பட்டியலைக் குறைப்பதற்கு மற்றும் மின்சக்தியை உற்பத்தி செய்வதற்கு ஏற்படும் செலவையும் இதனால் குறைக்கலாம் என அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டிற்கு அவசியமான மின்சக்தியை உற்பத்தி செய்யும் ஒழுங்குமுறை இன்மையால் மின்சார சபை அவசர மின்சாரத்தைக் கொள்வனவு செய்ய வேண்டியேற்பட்டுள்ளமை தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும முன்வைத்த வாய்மொழி மூலமான கேள்விக்கு பதிலளிக்கும் போதே எரிசக்தி அமைச்சர் மேற்கண்டவாறு தெளிவுபடுத்தினார்.

முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு மற்றும் மின்சக்தி அமைச்சு என்பன இணைந்து சூரிய மற்றும் சுழல் சக்தியினால் 4000 மெகா வோட்ஸ் ஆகியவற்றை உற்பத்தி செய்யும் நிகழ்ச்சித் திட்டம் தொடர்பாக அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளதாகவும் ஜனாதிபதியின் ஆலோசனைக்கு இணங்க இவ்வமைச்சரவைப் பத்திரம் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் அமைச்சரவைக்கு சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

கொழும்பு உட்பட பல்வேறு மாவட்டங்களில் மழை வீழ்ச்சி கிடைத்தாலும் நீர் மின் நிலையங்கள் அமைந்துள்ள பிரதேசங்களுக்கு அவசியமான மழை வீழ்ச்சி கிடைப்பதில்லை என்றும், மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்காக அம்மழைவீழ்ச்சி போதுமானதாக இல்லை என்றும் இதன்போது அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இன்று நாட்டில் மின்சக்தி தொடர்பாக பாரிய பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. தற்போது காணப்படும் மின்நிலையங்களுக்காக அதிக செலவு ஏற்படுகிறது.

அவ்வாறான சுவர் மின்நிலையங்கள் கடந்த 20 வருடங்களுக்கு முன்னே அகற்ற வேண்டியேற்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. விசேடமாக சம்பூர் போன்ற மின் நிலைய நிகழ்ச்சித் திட்டம் போன்றவற்றிற்கு கடந்த அரசாங்கத்தில் எடுத்த கொள்கை ரீதியான தீர்வுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

அனல் மின்நிலையங்களை நிருமாணிப்பதை நிறுத்துவதற்காக உலகளாவிய ரீதியில் கொள்கைத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் நுரைச்சோலை மின்உற்பத்தி நிலையத்தை அமைக்கும் நடவடிக்கைகள் எதிர்வரும் மே மாதமளவில் பூர்த்தி செய்வதற்கு அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.

நீண்ட காலத் திட்டம் என்ற வகையில் அதானி நிறுவனத்துடன் பூநகரி மற்றும் மன்னார் பிரதேசங்களில் சுழல் மின்நிலையங்களை அமைத்தல் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. சியம்பலாண்டுவ மற்றும் மட்டக்களப்பு போன்ற பிரதேசங்களில் சுழல் மின்நிலையங்களை நிருமாணிப்பதற்காக அனுமதி கிடைத்துள்ளது.

அதுதவிர, சம்பூர் மின்நிலையத்தில் எதிர்வரும் வாரமளவில் நிருமாணப் பணிகளை ஆரம்பிப்பதற்கும், முதற்கட்டமாக 50 மெகா வோட்ஸ் மின்சாரத்தை சூரிய சக்தியினால் உற்பத்தி செய்வதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது.
சூரிய மின்கலங்களைப் பெற்றுக்கொள்வதற்கு மக்களுக்கு நிதியுதவி வழங்குவதற்காக சக்தி அரசாங்கத்திடம் தற்போது காணப்படவில்லை.

ஆனால் சர்வதேச நாணய நிதியத்தின் 2ஆம் கட்டக் கொடுப்பனவுகள் கிடைக்கப் பெற்ற பின் அதற்கான கடன் உதவியின் கீழ் குறைந்த வட்டிக்கு இவ்வாறான உதவிகளை வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாகவும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன ஜயசேகர மேலும் விபரித்தார்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.