உத்தரப்பிரதேச மாநிலம், ஆக்ராவில் இரண்டு மாணவர்கள் அவர்களின் ஆசிரியரின் காலில் துப்பாக்கியால் சுட்டுவிட்டு, தங்களை `கேங்க்ஸ்டர்’ என்று கூறி வீடியோ வெளியிட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதையடுத்து கைதுசெய்யப்பட்ட மாணவர்களிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த வீடியோவில், `ஆறு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் திரும்பி வந்து எங்கள் ஆசிரியரைச் சுடுவோம். நான் அவரை 40 முறை சுட வேண்டும், இன்னும் 39 மீதம் உள்ளது’ என்று இளைஞர்களில் ஒருவர் வீடியோவில் கூறுகிறார்.

தற்போது அந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இந்தச் சம்பவம் ஆக்ராவின் கண்டோலி நகரிலுள்ள ஒரு பயிற்சி மையத்துக்கு வெளியே வியாழக்கிழமை நடந்துள்ளது. இரண்டு மாணவர்களும் தங்கள் ஆசிரியரான சுமித்தை அவரது பயிற்சி மையத்துக்கு வெளியே வைத்து காலில் சுட்டுள்ளனர்.
மேலும் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட மாணவர்கள் இருவர்மீது இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 307 கொலை முயற்சி, சட்டப்பிரிவு 506 கொலை மிரட்டல் ஆகியவற்றின்கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டு, இன்று காலை அவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டனர்.

தாக்குதலுக்குள்ளான ஆசிரியர் சுமித், கைதான மாணவர்களில் ஒருவன் பயிற்சி மையத்தில் பெண் ஒருவருடன் பழகுவது குறித்து, அவனுடைய வீட்டாரிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அதன் காரணமாகவே ஆத்திரத்தில் அந்த மாணவன், தன்னுடைய நண்பனுடன் சேர்ந்து இத்தகைய சம்பவத்தில் ஈடுபட்டதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.