ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெறும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியை ஒவ்வொரு இந்திய கிரிக்கெட் அணியின் ரசிகர்களும் எதிர்பார்த்திருக்கிறார்கள். இரு அணிகளும் நாளை தான் முதல் போட்டியில் விளையாட இருக்கின்றன. 2013 ஆண்டுக்கு பிறகு ஐசிசி கோப்பையை வெல்லாத தாகத்தை போக்கும் போக்கும் நோக்கில் ரோகித் படை களம் காண உள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தைப் பொறுத்தவரையில் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என யூகிக்கப்பட்டுள்ளதால், ஆஸ்திரேலிய அணிக்கு ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் மற்றும் அஸ்வின் சிம்ம சொப்பனமாக இருப்பார்கள். ஆனால், குல்தீப் அல்லது அஸ்வின் ஆகியோரில் ஒருவருக்கு மட்டுமே பிளேயிங் லெவனில் ஆடும் வாய்ப்பு கிடைக்கும் சூழல் உள்ளது.
இதனை கருத்தில் கொண்டு டேவிட் வார்னர் சென்னை சேப்பாக்கத்தில் உள்ளூர் இடது கை சுழற்பந்துவீச்சாளர் ஒருவரை வைத்து பயிற்சி எடுத்திருக்கிறார். அவரைப் பொறுத்தவரையில் இடது கை சுழற்பந்துவீச்சு எதிர்கொள்வது கடினமானதாக இருக்கிறது. இதனை மனதில் வைத்து தான் சுழற்பந்துவீச்சுக்கு எதிராக தீவிரமாக பயிற்சி எடுத்திருக்கிறார் வார்னர். அவரைப் போலவே மிட்செல் மார்ஷூம் இடது கை சுழற்பந்துவீச்சாளரைக் கொண்டு பயிற்சி எடுத்திருக்கிறார்.
இவர்களைத் தவிர, கேமரூன் கிரீன், ஸ்டீவன் ஸ்மித், அலெக்ஸ் கேரி, கிளென் மேக்ஸ்வெல் மற்றும் ஜோஷ் இங்கிலிஸ் ஆகியோருடன் ஆடம் ஜம்பா, மார்னஸ் லாபுஷாக்னே மற்றும் டி’ஆர்சி ஷார்ட் போன்ற ஆஸ்திரேலிய அணியின் சொந்த சுழற்பந்து வீச்சாளர்களையும் ஆஸ்திரேலிய வீரர்கள் பந்துவீச செய்து தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது, சில பந்துகளை ஷாட் ஆடி பார்த்தாலும், முக்கியமாக ஸ்டிரைக், டிரைவ்கள் மற்றும் மிட்-விக்கெட் நோக்கி ஃபிளிக் செய்வதிலும் கவனம் செலுத்தினர். டேவிட் வார்னர் தீவிரமாக பயிற்சி செய்து, உலக கோப்பை போட்டியில் இந்திய அணியை எதிர்கொள்ள முழு மூச்சுடன் தயாராக இருக்கிறார்.